Monday 12 December 2016

கூவுகிறேன்..!


உன் பெயர் கூவுகையில்
சுமை தா
என்று கேட்டறிந்தாயோ..!
ஆதலின்
காதல் சுமை தந்தாயோ..?

உன்னோடு பேசுகையில்
விட்டு பறந்து சென்ற
பேடைபெயர்
சொல்லி அழுதேனோ.?

ஒவ்வொரு அழுகைகளிலும்
நீயும் ஓலமிடுவாய்..
என் சோகம் தாங்கி..
என் தேகம் தாங்கி
உன் தோள் கொண்டு..!

அணை கட்ட முடியா
உன் ஆசைகள்
ஒப்புவித்தாய்..!
சற்று யோசி என்றாய்..!

அன்று,
அளவுகளற்று யாசித்தும்
யோசிக்காமல் போனாயே..!

மீண்டும் வராதே இவ்வாழ்வு..!
தேடிடும் உயிர் நீ தானே..!
வந்திடு என்னோடு
வாழ்வோம் நூறாண்டு..!

பேசாத வார்த்தைகள்
பேசிட வேண்டிய கதைகள்
நூறாயிரம் உண்டு
என்னோடு..!

இன்று
இறந்த காலங்கள்..!
இறந்த காதல்கள்..!
உன் பேர் சொல்லி
மட்டுமே கூவுகின்றேன்..!

நித்தம் என் கனவில்
நீ உலா வருகிறாய்..!
உன் நினைவுகளில்
கொல்கிறாய்..!

ஏன் என்னை தனிமையில்
விட்டு போனாய்..!
எரியும் நெருப்பில்
சாவு வேண்டுகிறேன்..!
உன்னை தொலைத்த பாவி
நானாகிறேன்...!

இரவின் உறக்கத்திலும்
வெளிச்ச விடியலிலும்
உன் பெயர் கூவுகிறேன்...!

Wednesday 7 December 2016

இலக்கண பிழை..!


எல்லா உண்மைகளும்..
உண்மை காரணங்களும்
நீ மட்டுமே அறிவாய்..!

அவ்வுண்மைகள் உன்னை
ஊமை ஆக்கியதோ..!
அதனின் துணை கொண்டு
உண்மை மறைத்தாயோ..?

வாய்மை ஊமை ஆகி
பொய் உரைத்து விடின்
மெய் என ஏற்பாயோ??

பொய் உரைத்து
புது வாழ்வு
தேடிடும் ஆசைகள்
எனதோடு இல்லை..!

ஏமார்ந்து பழகியதால்
ஏமாற்றத்தின் வலி
அறிவேன் நான்..!
எக்காரணம் கொண்டு
யாரையும் ஏமாற்றிடாது..!

கூறிய நீள நிஜங்கள்
மன எண்ணங்களையும்
கனவின் வண்ணங்களையும்
மாற்றியதோ...?

அஃது,
அழகெனவே
அமுதனவே
நீல வண்ண பொய்கள்..

நிஜங்கள் என
சொல்லி இருப்பின்
ஏற்று இருப்பாயா..?

உதடுகளில் உதிர்ப்பது
நாக்கின் தயவில்
சந்தர்ப்பத்தில் வந்தது அல்ல..!
இதயத்தின் வாயில் தாண்டி
வந்த வார்தைகள்..!

உவமைகளோ உருவகங்களோ
கொண்டு உருவங்கள்
உருவாக்கவில்லை..!

காண்கின்ற யாரோடும்
சொல்லியதில்லை..
வாழ்வோடு வரும் உறவுகள்
மட்டும் அறிந்த உண்மை..!

சொல்லிடும் நேரத்தில்
இவ்வண்ணம் தோன்றிய
எண்ணம் என்னோடு இல்லை..!

பிற்போக்கு சிந்தனையில்
சிதைந்தவளா நீ?
முற்போக்கு சிந்தனைவாதி..
சிந்தனை சீர்திருத்தவாதி...
என்றல்லவா எண்ணியிருந்தேன்..?

உன் வயதின்
வேகம் தாண்டிய
உன் பக்குவத்தில்
பல வேலைகளில்
என் புருவங்கள் உயர்த்திருக்கிறாய்..!

சாட்சிகளும்
சாட்சிகள் கண்ட
காட்சிகளும் உண்டு..
நியாயம் நிரூபிக்க
ஆதாரங்கள் ஏதும் இல்லை..!

ஞானப்பார்வை கொண்டு...
தெளி நீர் பார்வை கண்டு..
காலங்கள் கடந்து
கடந்த கால பார்வை
விடுப்பாயோ..?

இல்லை
இலக்கண பிழை
இவன் என்று
என்னின் அத்தியாயம்
முடிப்பாயோ..!

Tuesday 6 December 2016

அன்பிற்கினிய தோழியே..!


அன்பிற்கினிய தோழியே
அழுதிடாதே..
ஐயம் கொண்டிடாதே..
ஒரு போதும்..!

யாரும் அற்று
போய் விடுவோமோ என்ற
உன் அச்சம் தவிர்..!

ஆண்டுகள் தாண்டி...
பேசாமலே போய்
விடுவோமோ என்றெண்ணி
பேசாமல் போன
ஒட்டுமொத்த கதைகளையும்
நீயே பேசினாய்..!

ஆண்டுகள் தாண்டி...
நினைவுகள் தோண்டி
அழுது அழவைத்தாய்..!

ஆண்டுகள் தாண்டி..
நம் நினைவுகள் தோண்டி..
உன் அழுகையிலும்
விடை வேண்டிய
வினாக்களிலும் - பின்னோக்கி
பிடித்திழுத்து சென்றாய்..!

மிக சில சமயங்களில்
மட்டுமே எனக்கு
கிட்டிய
கிட்டுகின்ற பாக்கியம்..!

கடந்த கால
நினைவுகள் செல்கையில்
இன்புற்று புன்முறுவல்
புரிந்த தருணம்.!!

அவ்வண்ணமே ஓர்
நினைவுப்பயணம்
செய்தமைக்கு நன்றி..!
என்னுள் மகிழ்ச்சி
கொய்தமைக்கு நன்றி..!

இயலாமையின் வலியில்
இயந்திர வாழ்வு போதும்..!
வழிகள் உன்னோடு தான்..!

செந்தூரம் ஏந்திய
என் நெற்றிக்கண் அறியும்
உன் விரல்களின் ஸ்பரிசமும்
உன் விழிகளின் பாசமும்
உன் இதயத்தின் நேசமும்...!

காதலியோடு செல்கையில்
கவலை ரேகைகள்
ஆட்கொண்டுவிடும்..!

சொந்தங்கள் சுற்றங்கள்
அறிந்திடாத காதல்...!
ஆகையின் யாரேனும்
கண்டிட நேரிடுமோ
என்று..!

நல்ல வேலை நட்பிற்கு
அந்த கவலை இல்லை..!
தோழி என்று உரக்க
சொல்வதில் என்னோடு
எப்போதும் ஓர் ஆனந்தம்..!

உன் திமிர் பேச்சுக்களும்..
எந்த விவாதத்திலும்
அடங்கி போயிடாத
உன் எதிர் பேச்சுக்களும்..!
அவ்வளவும் என்னால்
ரசிக்கப்பட்டவை..!

கவலை ரேகைகள்
யாவும் நேற்றோடு
களைந்திடு..!
உயிர் தோழி உருவம்
கொண்டவள்!

என்றும் நீ 
தோள் சாய 
ஓர் தோழன் உண்டு
என்று உணர்ந்து அறிந்திடு..!
புன்னகை பூத்திடு..!

-நட்புடன்
இரா.செந்தில்குமார்.

Wednesday 30 November 2016

தீரா காதல்..!


எக்காரணம் கொண்டு
இங்கு வந்தேன்..!
காதல் காரணியாய்
செயல்பட...

செயலற்று போன நான்
கடல் கடந்தேன்...
காதல் கடக்க முடியாமல்..!

காதலின் மீதமாய்..
கடைசியாக நீ
வீடு வந்த பொழுதில்..

என்னோடும்
என் வீடோடும்
சிதறவிட்டு சென்ற
வெட்கங்கங்களையும்
காதலையும்
உன் கடைசி கண்ணீரையும்
சேகரித்து உடன் கொண்டு வந்தேன்..!

கசையடி தந்து
காதல் விசை
திசை மாற்றி ஒரு பயணம்..!

ஏகாரமாக உனை சொல்லினும்
ஓகாரமாக நானும் சேர்கிறேன்..!

மிரட்டும் காதல்..
துரத்தும் நினைவு..
அரட்டும் விதி..
உள்ளடங்கி போகும் நான்..!

என்று தணியும் என்
தீரா காதல் பசி..!

அள்ளி பருகி வாழ் ரசித்திடும்
முன் ஓடி போனது ஏனோ..?
அடங்கி போகையிலே
அதிர்ந்து பேசுவது ஏனோ??

சொல்வேதல்லம் கேட்ட நொடிகள்
மாறிய தருணம் எதுவோ?

அடங்கி போய்விடாதோ
என் காதல் பசி
இத்தனை அடிபட்டும்..!
இன்னும் ஏன் பசி
ஏக்கம் என்னோடு..!

என்று தணியும் என்
தீரா காதல் பசி..!
மிகைப்படுத்தல் ஆயினும்
நிஜம்
நீ மட்டும் தான்..!

உலகம் சுழலும்..! உன்னுள் சுழலும் உலகம்..!

கால சுழற்சியில்
ஏதேதோ மாற்றங்கள்
நம்முள்ளே..!

வாழ்க்கை நடைமுறையில்
நடையில்....
நரை பொங்கிடும்
என் தாடியிலும்..!

ஏதோ ஓர் அலுவலாய்
எங்கோ செல்கையில்...

நெரிசல் மிக்க
அந்த நாற்கரச்சாலையின்
போக்குவரத்து சமிக்கையில்
எதிர் உன்னை காண
நேர்கின்றது..!

பார்த்த கணம்
பிரமிப்பில் ஆழ்த்தி
மௌனிக்கச்செய்த காலம்..!
இத்தருணத்தில் நம்மை
இட்டது ஒரு கோலம்..!

உருமாறி நிறம்மாறி
மனம்மாறி
திசைமாறிய நாம்..!
இன்று..
காலங்களும் கோலங்களும்
மாறி..!

அத்தனைகால
திடகாத்திரத்தை  உடைத்து
என்கண்ணில்
பெருக்கெடுத்தது நீர்..!

அந்த நாற்கரச்சாலையில்...
பேருந்தின்
ஜன்னல் கம்பிகளில்
இடுக்குகளின் ஊடே...

நம் நான்கு கண்களும்
மௌன பாஷைகளை
பேசிக்கொள்கின்றன..!

மெல்ல மெல்ல நம்
ஆழ் நினைவுகள்
என்னை கொல்கின்றன..!

உன் வயிற்றின் வீக்கம்..
முகத்தில்
ஒளிரும் வெளிச்சம்..
காண்கையில் - நீ
தாய்மையின் அருகாமையில்
இருப்பதாய் சேதி
சொல்கின்றதே..!

நிஜம்தானோ....?

குழந்தேயென என் விரல்
பிடித்து சாலை கடந்தவள்
தானே நீ..!
எங்கு என் விரல் விடுத்தாய்..!

நானே உயிர்..
நானே உலகம்...
என்று சுற்றியவள்...!

இன்று உனக்குள்ளே ஓர்
உயிர் உலகம்
சுழலும் தருணத்தில்
காண்கிறேன்...!

இதோ!
சிவப்பில் இருந்து
மஞ்சளென மாற போகிறது..!

பச்சைவிளக்கு வருகையில்
மீண்டும் திசை
மாற போகும்
பயணம்..!

போய் வருகிறேன்..!
இல்லை போய் வா..!

இனி எங்கனம்
எப்பொழுது
காண்போம்
என அறியாமல்
விடை பெறுகிறோம்..!

கைப்பிடியளவேனும்
நம் காதல்
வைத்திருப்பாயா
உன் நெஞ்சோரத்தில்??

Tuesday 29 November 2016

வலியின் வடிவம்..!


பார்வைகள் தூரங்கள்..!
நாட்கள் தாண்டிய
நம் இரவு பேச்சுக்கள்...!
இன்று ஆண்டுகள்
கடந்தும் பேசாமல்..!

கடிதம் என்பது தூரங்களின்
காகித வடிவம் - எங்கேயோ
படிக்கையில் பதிந்தது..!

இக்கவிதை இதயத்தின்
வலியின் வடிவம்..!

தூர தேசத்து காதலியே
கிடைக்குமா உனக்கும்
எனை பற்றிய சிந்தனைகள்..!

நல்வாழ்வு வாழும்
சாட்சி சொல்லும்
உன் புகைப்படங்கள்..!

தகவல் தந்திடும்
தகவல் தொழில்நுட்பங்கள்..!

உல்லாச பயணங்களின்
சான்று சொல்லும்
உன் செயலியின்
ஓர் பதம் போதும்
எனக்கு!

இத்துணை மத்தியில்
அத்துணை இடையில்
என்னை பற்றிய சிந்தனைகள்
சிறிதேனும் துளிர்த்ததா..?

ஆண்டுகள் கடந்தும்
நொடிகளில்
அரங்கேறிடும் உன்
பொன்முகம்..!!
விழி மூடி திறக்கையில்..!

தன்
வாழ்நாள் வீரியம் அழித்து..!
அன்பிற்கினிய காதல் அளித்து..!
வாழ்வுதனை விரயத்து
வாழும் நீசன்..!

என்றேனும் எவரேனும்
உன்னிடத்தில்
ஒரு கெட்ட எடுத்துக்காட்டு
கேட்கையில்
தயவு  செய்து
என்னை எடுத்து காட்டு...!

ரகசிய சிநேகம்..!


ரயிலுக்கும் எனக்கும்
எப்போதும் ஓர்
ரகசிய சிநேகம்..!

நண்பனின் தோள் என
என் சோகங்கள்
தாங்கிடும்..!

கவலைகள் மறக்க..
கண்ணுறங்க..
தாலாட்டு பாடிடும்..!

அதனின் தண்டவாள
தாளச் சத்தங்கள்
சங்கீதங்களாய்...

ஜன்னல் ஊடே
கடந்து போகும்
சோடியம் வெளிச்சங்கள்
மின்மினி பூச்சிகளாய்...!

அதனோடு செல்கையில்
எப்பொழுதும்
கற்பனைகள் கரை
கடந்து ஓடிடும்...!
கவிதைகள் ஊற்றெடுக்கும்..!

எல்லா ரயில் பயணத்திலும்
காதல் கவிதைகள்
எழுதிடும் மனம்..!

இம்முறை என் காதலை
ரயிலோடு
இன்னொரு பெட்டியாய்
இணைத்து கொள்கிறேன்!!!

கடல் கடந்திடும்
விமான பயணத்தில்
கூட தோன்றியதில்லை..!

சிநேகிதனின் சிநேகிதன்
போல...
ரயில் சிநேக
நண்பர்கள் வாழ்வில்
உண்டு..!

எல்லோர் வாழ்வும்
ஓர் கதை சொல்லும்!
வாழ்க்கை பாடம்
சொல்லும்..!

என் வாழக்கை பயணத்திலும்
கதைகள் உண்டு..!
கதையின் கரு
உவமைகளாய் ரயிலோடு...!

தத்தம் நிறுத்தங்களில்
இறங்கியதோடு சிநேகம்
மறந்தோர் சில உண்டு..!

நிறுத்தங்கள் வரும் வரையில்
வேண்டி சிநேகம் வளர்த்தோர்
பல உண்டு...!

தனி ரயில் பயணத்தில்
சில சிந்தனைகள்
எப்போதும்
என்னோடு பயணிக்கும்...!

பயணத்தின் பின் செல்லும்
பொருட்களோடு
ஒரு போதும் போட்டியிட்டு
விட்டு சென்றதில்லை
நினைவுகள்..!

சில சமயங்களில்
யாரிடமும்
சொல்லிட முடியா
காரணங்கள் கொண்டு
வெற்றிடம் குடியேறும்
மனதோடு..!

தாய் மடியென...
தோழனின் தோள் என..
தோழியின் நேசம் என..
காதலியின் வாசம் என..

ஒவ்வொர் முறையும்
ரயில் பயணம்
சின்னதாய் சிலிர்க்க வைத்து
உயிர்ப்போடு இருக்க
உதவுகிறது..!

ரயிலோடு
இன்னொரு பெட்டியாய்
இணைந்து கொள்கிறேன்!!!

சிறகுகளும் சிந்தனைகளும்...!


பிரியும் வரை  - தயக்கம்..!
புரியும் வரை - குழப்பம்..!
அறியும் வரை - ஆற்றாமை..!
அறிகையில் ஏமாற்றம்...!

நிஜம் காணும் போது
நீயும் நன்கு உணர்வாய்!!

அரண் கொண்ட அற வாழ்வு..!
சிறகுகளும் சிந்தனைகளும்
உன் வசம்..!
மனமுவந்த விருப்புபெறுப்பு
உன் பொறுப்பு..!!

சில வாய்மொழிகள்
கேட்டறிபவை அல்ல..!
உணர்ந்து அறிபவை..!

கேடின் கொடிதுணர்ந்து
தேடினும் - நினைவுகளினூடே
மட்டும் காண்பாய்..!

வீழும் வேளையில்
உணர்ந்தென்ன லாபம்..!
வீழ்ந்தெழுந்து விடியல்
காண்கையில்
வானில் என் விடியல் இல்லை..!

Friday 25 November 2016

சொல்லிடாத ஓர் வார்த்தை..!


இதுவரை யாரோடும்
சொல்லி பழகாத
ஓர் வார்த்தை..!

பழகி சொல்ல தோணுகையில்
தயக்கம் என்னை
தடுக்க கண்டேன்!!
ஆசைகளை ஒடுக்க கண்டேன்
நடுக்கம் கொண்டேன்..!!

இது தவறோ
என்றெண்ணம் - மனதோடு
எழாமல் இல்லை..!
சரியாய் இருக்கும்
என்ற நம்பிக்கை
துளிர்க்காமல் இல்லை..!

தவிர்ப்புகள் புரிகையில்
தயக்கம் கொள்கிறேன்..!
தள்ளியே நிற்கிறேன்..!
தனிமை காண்கிறேன்..!

தடுமாற்றம் தெரிந்துவிட
கூடாதென
உறுதிமொழி கொள்கிறேன்..!
அவ்வண்ணமே எண்ணிய
எண்ணம் கொல்கிறேன்..!

என் மௌனங்களுக்குள்
இருக்கும் வார்த்தைகளை
விழிகளால்
மொழிபெயர்த்து

இதழோர சிரிப்பில்
ஒப்புவித்து போகும்
ஒவ்வொரு முறையும்
என்னை பிரம்மிக்க
வைத்தாய்..!

மிக துல்லியமாய்
மௌனங்கள்
பெயர்த்த உனக்கு
இதழ்கள் சொல்லிட
துடிக்கும் வார்த்தைகள்
புரியலையா..?

இட்ட மன இடர்
தாண்டி வெளி வருகிறேன்..!
தீப சுடர் காண்கிறேன்..!

விருப்பமற்று வாழ்ந்த
நானோ - இன்று
தவறுதலாக கூட
தவற விட விருப்பமற்று
வாழ்கிறேன்..!

யாரோடும் சொல்லாமல்
இன்று மட்டிலும்
என்னோடு மட்டுமே
வைத்திருக்கிறேன்..!
பொக்கிஷம் என
பொத்தி வைத்திருக்கிறேன்..!

Thursday 24 November 2016

காதலுடன் நான்..!


மறக்க வேண்டிய நினைவுகள்..!

சுற்றி ஓர்
வட்டம் வரைந்து
சுற்றம் உணராது..!

நினைத்து நினைத்து
கண்ணீர் வடித்து
வறண்டு போன கண்களோடு..!

வலிகளை வார்த்தைகளில்
வடித்து - கொஞ்சம் கொஞ்சமாய்
விஷம் வெளியேற்றுகிறேன்..!
நினைவுகள் மறக்கிறேன்..!
நிஜங்கள் ஏற்கிறேன் ..!!

உதாசீனங்கள் உணர்த்திய உறவுகள்..!
சோகமோ, கோபமோ
வலியின் வேகமோ,
இயலாமையோ..
ஏதோ ஒன்றாய்..
என் விரல்களை
உதறி தள்ளிய உறவுகள்...!

எண்ணி பார்க்கையில்
யாதும் தொலைத்து
ஏதுமற்று தனித்திருக்க
வந்த பயணம் தான் இது..!

இன்று எண்ணிக்கையில்
நூறாய்
என் நினைவுகள்
இந்த பயணத்தில்..!

எழுதிய நாட்குறிப்பு
தொலைந்து போகக்கூடும்..!
என் நாட்குறிப்புகள் கூறும்
இவ்வலைத்தளமும்
உள்ளிருக்கும்
வேதனை வரிகளும்..!

தலைப்புகள் மட்டுமே
வேறுபடும் - பதிவாகியிருக்கும்
ஒவ்வொரு
கவிதைகளுக்கும்..!

அதனின் நிஜங்களும்
நினைவுகளும்
எளிதில்
புரிந்து கொள்பவை அல்ல..!!
கடந்து செல்பவை அல்ல..!!

கவலைகள் மறக்க வைத்த
என்னோடு உடன் இருந்த
சில நல்உள்ளங்கள்!!
வாழ்வில் எப்பொழுதும்
என் விரல் பிடித்து
உடனிருப்பதாய் உணர
வைத்திட்ட இதயங்கள்..!

பதிவுகளை பார்வையிடும்
அனைவர்க்கும்
உளமார்ந்த நன்றிகள்..!!

காதலுடன்..
இரா.செந்தில்குமார்.

Wednesday 23 November 2016

மௌன பனிக்கட்டி..!


சுற்றம் சூழ என்னை
கொண்டாடும் பொழுதிலும் கூட
லயிக்கவில்லை
என் மனம் இன்பத்தில்..!

ஏதோ ஓர்
சோகம்
முகில்தனில் வந்திறங்கி
முகம்தனில் தவழ்கிறது..!

தனிமையின் துயர்
கொஞ்சம் கொஞ்சமாய்
தேங்குகிறது நெஞ்சோடு..!!

யாருமற்று வாழ்வு
வாழ்வதை போல
ஓர் உள்ளுணர்வு..

யாதும் இருந்தும்
ஏதும் அற்றது
போல்
ஓர் மிதமிஞ்சிய சோகம்..!

கொஞ்சமே தயங்கி...
கொஞ்சம் யோசித்து..
காரணம் கண்டிட..
தனிமை கொன்றிட..

நொடிகளில்
என் இதய பரண்
ஏறி பார்க்கையில்
நீ மட்டும் நிழலாடுகிறாய்..!

உன் நினைவுகள் மட்டும்
என்னை உயிர்ப்போடு
வைத்திருக்கிறது...!

நீ விட்டு போன
நான் மட்டும்
மிச்சமென இருக்கிறேன்...!

மௌன பனிக்கட்டியை
எப்போது உடைப்பாய்?
காத்திருக்கிறேன்
கொஞ்சம் சோகத்தோடு
கொஞ்சும் காதலோடு..!

கனவுக்காட்சிகள்..!


ஏன் என் பாதையில் வந்தாய்..?
ஏன் பாதியில் போகிறாய்..?
ஏன் என் பாதியாக மறுக்கிறாய்..?

பயத்தோடு தான் மறைக்கிறேன்..!
உனக்கென அனைத்தையும்
துறக்கிறேன்..!

நீயே என் பதியாக
விரும்புகிறேன்..!

ஆட்கொண்ட மௌனம் அகலட்டும்!
உயிர் தகவல் தருவாயோ?
தகவல் தந்து உயிர்
காப்பாயோ...!

உயர்திரு நானோ
மதி மறந்து
என் திருமதி நீயாக
விரும்புகிறேன்..!

மங்கலாய் தெரியும்
கனவுக்காட்சிகள்
மறைந்தே போகுமா..!
மணமாலை சூடுமா..?

காத்திருக்கிறேன் கனவுகளோடு..!
ஆமோதிப்பதாய்
முடியசைத்து சிரிப்பாயாக..!

Tuesday 22 November 2016

விழியின் விந்தை..!


விழியின் வழியே செல்கிறேன்
வலியோடு வருகிறேன்..
வழி தவறிய விழிகளால்..
வலியோடு வாழ்கிறேன்..!

விழிகள் கூறும் மொழிகள்
யாவும் நிஜங்கள்
என நம்பிடும்
விழி குருடன் ஆனேன்!!

கண்டேன் நானும்...
பார்த்த பார்வை மாறி போக..!
கோர்த்த மாலை உதிர்ந்து போக..!
பூத்த சோலை காய்ந்து போக..!

செய்த பிழை
கொய்த விலை..
யார் அறிவார்?
அறிவால் அறிவார்...
அன்பால் அறியார்..

உன் விழியின் பார்வையில்
பார்த்த பின்பு தான்
தெரிகிறது எனக்கு..!

பிழை பார்வையில் இல்லை
பார்த்த விழியோடு என்று..!

விழிகள் மாறி போகாது
விதிகள் மாறி போகும்..!

விழிகள் மாற்றுகையில்
வழிகள் இருப்பதில்லை...!

மாறிய விதிகள் கண்டு
விழிகள் ஓர் நாள் கண்ணீர்
கதை சொல்லும்!!
விதிகள் மாறி போகும்..!

Monday 21 November 2016

முன்னுரை முடியும் முன் முடிவுரை !


வெகு நாள் சென்று
நெஞ்சோடு பாரம்
ஏறி நிற்க..!

துக்கம் அடைத்த தொண்டையில்
வார்த்தைகள்
வழி தேடி அலைய..!

கண்ணீர் அடைத்த விழிகளில்
காட்சிகள் முற்றிலும் களைய..!
சுத்த காற்று தேடி
சுவாசப்பை  துடிக்க..

உள்ளூர ரசித்தாய்..!
கண்கள் பணித்து
உடனே அழுதாய்..!

எல்லை மீறிய என்
செய்கையில்
வில்லென கேள்விக்குறியாய்
எதற்கு என்பதனவே

வளையும் உன்னின்
புருவங்கள் உயர்த்தி
அம்பெய்திடும் முன்
முடிவுரை மொழிகிறேன்...!

Friday 18 November 2016

அன்பிற்கு வாய்த்த பெருமை..!

`

என்னை அழ வைக்கும்
உரிமையும்...
தைரியமும்...

கொண்ட அன்பிற்கும்,
அன்போடு நான் கொண்டவர்கும்,
அன்பில் என்னை கொண்டவர்க்கும்
மட்டுமே வாய்த்த பெருமை!!

எங்கு என்னோடு நீ நெருங்கினாய்?
பிரிகையில் நான் ஏன் நொறுங்குகிறேன்?
ஏன் என்னோடு நெருடல் இன்று..?
நெஞ்சோடு ஏன் உதறல் இன்று..?

நிலா அற்று போன வானமாய்
என் மனம்.!
இந்த இரவு
கனவுகள் கலைந்த இரவா..?
தூக்கம் தொலைத்த இரவா..?

துக்கம் தாங்கிய என் விழிகள்
அறிந்தவள் நீ..
அறிந்தும் ஏன் அமைதி
கொள்கிறாய்..?
அழுகையில் காதல்
சொல்கிறாயோ..?

ஒற்றையடி பாதை தானே என் வாழ்வு..!
எவ்வழியில் உள்நுழைந்தாய்!!
நடை பாதை பெரிதாக்கினாய்..!

என் மென்மைகள் முற்றும்
அறிந்தவள் நீ...
உன் விரல்களின் மென்மைகள்
உணர்ந்தவன் நான்!!

நம் விரல் சேர்கையிலே
என் ஆறாம் விரல்
அறுத்தெறியப்படும்
என்பது நிச்சயிக்கப்பட்ட உறுதி!!

விதிகளின் வசம் விட
விருப்பம் இல்லை..!
கொஞ்சம் மதி கொண்டு
உன் மதி சலவை செய்..!

என்னை அழ வைக்கும்
உரிமையும்..
தைரியமும்..

கொண்ட அன்பிற்கும்,
அன்போடு நான் கொண்டவர்கும்,
அன்பில் என்னை கொண்டவர்க்கும்
மட்டுமே வாய்க்கும்!!
அன்பிற்கினியவள் நீ!!

Wednesday 16 November 2016

தனியென சிதறுகிறேன்....!!!




வார்த்தைகளின் வாஞ்சைகளில்
கண்ணொளி காண கண்டேன்..!
காணாமல் போனேன்.!!
உன் செயல்கள்
கண்டு செயலிழந்தேன்..!

ஏமாற்றம் தரும்
மாற்றம் வந்த காரணம்
என்னவோ..?

வேண்டும் என்னும் எண்ணம்
வேண்டாம் என மாறும் வண்ணம்
தோன்ற காரணம் என்னவோ?

மனிதி கொஞ்சம் எட்டி பார்க்காதோ
மனப்பிணி தீராதோ..!

என் கனவுகளில்
ஜோடியோடு அலைகிறேன்..!
குடும்பமோடு குழைகிறேன்..!
குழந்தையோடு தவழ்கிறேன்..!
நிஜங்களில் ஏதுமின்றி
தனியென சிதறுகிறேன்....

அகம் திறந்து அன்புரைப்பாயா..?
மனிதி கொஞ்சம் எட்டி பார்க்காதோ..?
மனப்பிணி தீராதோ..?
என் தனிப்பிணி இன்றோடு முடியாதோ..?

Wednesday 9 November 2016

தீப திருநாள்..!


இன்று - தீப திருநாள்..!

தொலை தூரத்தில்
குடும்பம், நட்பு, காதல்
துறந்து வாழும்
யாவர்க்கும் சமர்ப்பணம்..!

பயணத் தொடக்கத்தில்
தொல்லைகள் மறந்த பயணமென
சுதந்திர காற்று வாங்கும் பயணமென
பலவாறு பகல் கனவு
கண்டிடும் இள மனங்கள்!!

நிறங்கள் மறந்து
நிஜங்கள் சில நிமிடம்
பேசுவோமேயானில்...
ஊமையாகி தான் போவோம் நாம்..!

இந்த தொலை தூரப்பயணம்
சொந்தங்கள் தொலைத்த பயணம்!
வயதை விரயம் செய்த பயணம்..!
காசு பணம் சேர்த்திடவே
வாழ்க்கை தொலைத்த
இந்த பயணம்!

நல்ல நாளின்
குளியல் முடித்து திரும்புகையில்
புது துணி ஓரத்து
சந்தனம் பூசிய
தாயன்பு விடுத்த
ஒரு பயணம்..!

தேர் திருவிழா ஆர்ப்பாட்டம்
குழாய் சத்தத்தில் பாடல்
சொந்தத்தின் கூட்டம்
ஆர்ப்பரிக்கும் ஆனந்தம்
இவை யாவும்
தொலைத்த ஓர் நல் பயணம்!!

தோழன் தோழி திருமண
புகைப்படம் மட்டும் கண்டு
கலங்கும் கண்கள்..!
நிஜங்கள் காணாது
நிழல் கண்டு வாழும்
மனங்கள் -
உண்மையில் பணப்பிணங்கள்!!

இன்று - தீப திருநாள்..!
நரகாசுரன் அழிந்த நாள்!!
பணம் பொருள் தேடி
அலைந்திடும்
நம் மன நரகாசுரன்
அழியும் வரையில்..!

நாம் அற்று போன
எல்லா திருநாளும்
நம் பெற்றோர்க்கு
கரி நாளே..!

குடும்பத்தோடு வாழுங்கள்
எல்லா நாட்களிலும்
உள்ளங்களில்
தீபம் ஒளிரட்டும்..!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

Tuesday 8 November 2016

விழிகளின் மொழி..!


உன் விழிகளில்
வழிந்தோடிய
காதல் திராவகம்
பருகியவன் நான்..!

காதல் மறைத்து
கள்ளம் கூறும்
உன் விழிகளின் மொழிகள்
யாதும் உணர்ந்தவன்
நான்!!!

என்னை விட்டு
தூரமாய் இருத்தல்
நன்று என்று
நீயே தீர்மானித்தாய் - இன்று
நீயே தூரமாகிவிட்டாய்...!

உன் விழிகளில்
வழிந்தோடிய
காதல் திராவகம்
கலைத்தவள் நீ!

நீ எனதில்லை என்று
ஆகும் பொழுதுகளில்
யாராகி போவேனோ நான் ?
உன் வாழ்வில்
யாரோ ஆகி போவேனோ??

Monday 7 November 2016

கடந்து போகும் வானம்..!!


உன்னை தேடி என் விழிகள்
அலையத்துவங்கிய
சில நொடிகளில்
எச்சரிக்கை மணி என்னுள்
அடிக்காமல் இல்லை

நீ
கடந்து போகும் வானமா ?
இல்லை
காலம் கடந்தும் வாழ போகும்
என் ஒற்றை வானமா ?

இதுவும் கடந்து போகுமா
இல்லை
இதயம் கடத்தி போகுமா ?

கடந்து போன பலர்
கடக்க போகும் சிலர்
கிடைக்க போவது யாரோ..!

கண்ணீர் துடைக்க
போவது யாரோ?

எச்சில் இலை
எடுப்பார் யாரோ?
தொடுவார் யாரோ?

மனிதத்தனம் இறந்து வாழும்
மனிதர்கள் கடந்தவன்
நான்!

மனிதம் தொலையா
இதயம் கொண்ட
சிறு குழந்தை தான்!

ஓடுபாதை தவறென தெரிந்து
ஓடுவதை விட
நிறுத்திக் கொள்வது நல்லது..!

சில கனவுகள்
கனவாகவே இருப்பதும்
சில ஆசைகள்
அடையாமல் விடுவதும்
சில நேரங்களில்
நன்மை பயிர்க்கும்..!

வினாடிகள் நிமிடங்களாய்
வினாடிகள் வருடங்களாய்
வினாடிகள் யுகங்களாய்
வாழ பழகினேன் !!

யுகம் யுகமாய் காதல்
வாழ்வு வாழ வந்தேனே!!
காதலை வாழ செய்தேனே!

காதல் சிசு..!!



நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
நீ வளர்த்த உன் காதல்
தேய்பிறையென...
நீ வளர்த்த என் காதல்
முழு நிலவென
வளர காண்கிறேன்...!

என்ன ஆகும் நீ வளர்த்த
நம் காதல்..!

தாய்மை உணர்கிறேன்!!!
உன்னால் - என்னுள்
உதித்த காதல்
இதயத்தில் கருவாக..!

என் இதய துடிப்போடு
நம் காதல் கருவின்
துடிப்பும் கேட்கிறேன்..
தாய்மை அறிகிறேன்!

பொத்தி போற்றி நம்
சிசு வளர்க்கிறேன்!!
காரணமற்ற செயல்களின்
காரணமாய் அச்சம் கொள்கிறேன்!

காதல் சிசு
கண்ணில் காண்போமா
இல்லை நம்
காதல் குழந்தையின்
கருவறுப்பாயோ..?

தோற்றம்....மறைவு..!


உன் கண்ணோரம்
காதல் கண்டது நிஜம்
நீ என்னோடு
காதல் கொண்டது நிஜம்
எக்காரணம் கொண்டு
உன் கண்ணின்
காதல் கழற்றி வைத்தாய்..?

உன் நெஞ்சோரம்
காதல் ஆசை கொண்டது நிஜம்
காதல் கடல் இறங்காது
கரையோரம் காதல் கழற்றி
வைத்ததன் உண்மை என்னவோ?

ஏமாற்று வித்தைகளில்
எல்லா முறையும்
ஏமாற்றம் கொண்டும்
மாற்றம் கொள்ளாத என் மனம்!

எதனின் நினைப்பில்
நாடகம் போடுகிறாய்?
என் நினைப்பில்
நாடகம் துறப்பாயோ?

என் நினைவை நெஞ்சில் கொள்வாயோ
இல்லை
கொண்ட நினைவையும்
என்னையும் கொல்வாயோ?

ஆசைகள் நீட்டியதும்
என்னுள் ஊட்டியதும்
உன் விழிகளும்
மொழிகளும் தானே..!

தானென தோன்றி
வரவில்லையே!
தோற்றம் கொடுத்த உன் விழிகள்
மறைவு தந்த உன் மொழிகள்..!

இனி மேலும் வேண்டுமா?
இனி இறைவனை வேண்டுமா
என் மனம்...?

காதல் பறவை
விடுதலை செய்வாயோ?
காதல் துறந்து
பறவை கொல்வாயோ?

நரம்புகள் அறுந்த நாண்..!

நெஞ்செனும் கூட்டில்
நானும் ஒரு
நல்வீணை செய்து
காதல் இசை மீட்டினேன்..!

உன் விழிகளோடு
உன் நினைவுகளோடும்
மட்டுமே
நிஜங்கள் பழகினேன்..!

உன் விழிகள் பார்த்தே
விஜயம் கொண்டன
என் தினசரிகள்..!

உன் குரல் கேட்கையில்
த்வனி நாதம் கொண்டு
காதல் ராகம் பாடினேன்...!

அடங்காத ஆசைகள்
என்னோடு உன்மேல்..!
அடைய வேண்டி
வேண்டிய தெய்வங்கள்
என்னின்
எண்ணிக்கையில் இல்லை ..!

உன் நிஜங்கள் அறிகையில்
நாட்களின் நீளம்
புரிகிறது!
நெஞ்செனும் காட்டில்
கனவுகள் எரிகிறது!

தூரங்களின் வெறுமைகள்
பிரிவின் தனிமைகள்
புரிந்தன
என் மனமும்
என் கனவும்..!

இன்றும் அவ்வீணை
என்னோடு  உண்டு..!
நரம்புகள் அறுந்த நாணில்
நானும் இல்லை
நாணின் இசையும் இல்லை..!

Thursday 3 November 2016

நம்பிக்கை விதை...கவிதையாய்..!!


எங்கே
எதனின்
எதனால்
எப்பொழுதுகளில்
உன்பால் நம்பிக்கை விதை
விழுந்தது
என்பதை நானறியேன்..!

காரணங்கள் அற்று
விழுந்த விதையின்
விருட்சம் காண்கிறேன்
என்னுள்ளே...!

விழுந்த விதை
வாழ்க்கை கவிதையாய் இன்று..!

என்னை பூமியில் விதைத்த
என் தந்தையின்
அன்பும் பண்பும்
நேசமும் பாசமும்
உன்னோடு நான் காண்கிறேன்..!

இது
காதலின் செயலோ
நட்பின் நேசமா
புரியவும் இல்லை
தெரியவும் இல்லை!!

இருந்தும்
தினமும் ஏங்குகிறேன்
கடவுளிடம் வேண்டுகிறேன்...!
வரம் வேண்டும்
உன் விரல் பிடித்தே
வர வேண்டும்..!

உன்னோடு யாவும்
என் வாழ் முழுதும்
கிடைத்திட வேண்டும்..!
நீயே என் வாழ்வின்
ஆதாரம் ஆகிட வேணும்.!

Monday 31 October 2016

யாவும் காதலை சாரும்!!


தொலைத்த நன் கோடாளிகள்
எத்தனை எத்தனையோ..
தொலைந்த கேடாலிகள்
எத்தனையோ?

பிறிதோர் சொல் இனி கேளேன்
பாதியில் பிரிந்தோர்
சொல் இனி கேள்வேனோ?

மதி மறந்த கதி
சுற்றம் துறந்த சதி
முற்றும் தொலைத்த விதி
யாவும் காதலை சாரும்!!

என்னின் பாதியாய்
என்னின் பதியாய்
நீ!!

என் காதல் இனி
நீ ஆகிட வேணும்..!
காதல் - இனி
நாம் ஆகிடவேணும்..!

இனிப்பு எடுத்து கொள்ளுங்கள்..!



இளைப்பாற நேரமின்றி 
கவலைகளில் களைப்புற்று 
காதல் நினைவுகளோடு 
நாட்கள் நகர்த்தினேன் 
நானும் தான்..!

வெகு நாள் களித்து
களிப்புறும் நிகழ்வு 
காண கண்டேன்..! 
கண்ணோடு 
கண்ணீர் கடல் கொண்டேன்!!

தூக்கம் வராத ஒரு
நடுநிசியின் பின்னிரவில் 
நானும் ஓர் 
உறுதி கொண்டேன்..!

விருப்பம் அற்ற மாற்றங்கள் 
மிகவும் 
துயரமானவை!!
இனி யதார்த்தம் உணர்ந்து 
வாழ பழகினேன்..!

என்னின் வைராக்கியங்கள் 
அனைத்தும் 
உன் அன்பிற்கு முன்னால் 
கொஞ்சம் கொஞ்சமாய் 
தன் பலம் தொலைத்தன..!

ஒவ்வொரு முறையும்
பார்க்கையில் 
ஏதேதோ அர்த்தம் தாங்கி  
சிரிக்கிறாய்..!

மிகை ஆகாத அளவில் 
உலகின் மிக அழகான 
சிரிப்பை 
உதிர்க்கிறாய்!
அஃது சிரிப்பு அல்ல 
சிம்பொனி..!

உன் விரல் பிடிக்கிறேன் நான்..!
வெட்கம் உதிர்க்கிறாய்..நீ!
இனிப்பு எடுத்து கொள்ளுங்கள் 
காதல் பிறந்துருக்கிறது..!

Tuesday 18 October 2016

வாசங்களோடு வாழ்கிறேன்..!


நம் காதல் காலங்களில்
வசந்த நாட்களில்
பூத்த காதல் பூக்களை
முகர்ந்துகொண்டே இருப்பேன் !...

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்??

உன்னை வழியனுப்பிய
நாளில்
ரயில் பயணத்தின்
ஜன்னனல்களோடு
வீசியெறிந்தாயோ..?

உன் திருமண நாளின்
மணமாலை சூடுகையில்
நம் காதல்
பூக்கள் களைந்தாயோ..?

புதிதாய் பூத்த மலர்கள்
தூவிய
பூ மஞ்சங்களோடு
இணைகையில்
நம் காதல் மலர் கசக்கி
எறிந்தாயோ?

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்..?

சம்மதங்கள் கோரிய
என்னோடு சமாதானங்கள்
கூறிய வெள்ளை புறா
நீயோ!!

புதிதாய் புகுந்த வீட்டின்
புன்னகை
பூ தானே நீயும்!

தம்பதி சகிதம்
கோயில் செல்கையில்
கணவன் முதலாய் பூச்சூடிய
வேளையில்
காதல் பூவின் கரு
அறுத்தெறிந்தாயோ?

வீசிய மணம்
நேசம் கொண்ட மனம்
மாறிடாது..!
இன்றும்  என் வானின்
ஒற்றை கனா நீ!!

சில வார உறவின்
பிரிவு உபசரிப்பின்
சோகம் கொண்டு
திரும்புகையில்
காதல் மலர்
தொலைத்தாயோ??

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்??

சேகரித்த கனவோடு
கணவனோடு சிறிய பிரிவின்
துயரோடு
உன் தனிமை
நெடுந்தூர பயணத்தின்
பரிசு பூச்சண்டுகளில்
விரல் இடுக்குகளில்
விழ விட்டாயோ?

தவிப்புகளின் மத்தியில்
தரை இறங்கி
துணை கண்டு
ஓடுகையில்
ஓடு பாதையின்
பாதியில்
மறந்தாயோ?

தலை முழுகையில்
சருகென கண்டு
காதல் மலர்
முழுதும் முழுகினாயோ?

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்??

நம்முள் பூத்த
காதல் பூக்களின்
நினைவுகளோடு...

காதல் நினைவுகளில்
தினமும் லயித்து
காதல் பூக்களின் வாசங்களோடு
வாழ்கிறேன்..!

நம் காதல் காலங்களில்
வசந்த நாட்களில்
பூத்த காதல் பூக்களை
முகர்ந்துகொண்டே இருப்பேன் !...

Monday 17 October 2016

பாதியில் அறுந்த உறவுகள்..!


என் காதல் வளையத்துள்
உன் வளையல் சத்தம்
கேளாதூரம் 
நீ நிற்பது - நன்று!!

நெருங்கி வருகையில்..
நிஜங்களின் நெருக்கம்
அன்பின் அதீதம்
கண்டு...

தூர நடை
நீயும் பழகுவாய்..!
என்னோடு தூர பார்வை 
நீயும் கொள்வாய்..!

தீரும் அன்பு கொண்ட
பெயரோடு வரும்
உறவு அற்று
வாழ்வது மிக நன்று!!

நிச்சயமற்ற உறவு
தரும் அன்பின்
அரவணைப்பை விட..

தனித்த பயணம்
நம்மிருவருக்கும் 
நலம் பெயர்க்கும்
என நம்புகிறேன்!!

துரத்தும் தனிமையின்
வீரியம் அறிவேன் நான்!!
பிரிவின் சோகம் தரும்
வலியின் வேதனை 
அறிந்தவன் தான் நான்!!

யாதும் இருந்து பின் 
யாதும் இழந்து 
வாழ்வதை விட
ஏதும் இன்றி வாழ்ந்திட
விரும்புகிறேன்!!

மிகை படுத்தப்பட்ட
வார்த்தைகள் ஆயினும்
மீள வரும் வழியின்
கடுமையும் கொடுமையும்
கடந்து வந்தவை
தாம் என் கால்கள்!!

அறிந்த உறவுகள்..
வாழ் பாதையின்
பாதியில் அறுந்த
உறவுகள்...
யாவும் கடந்தவை தான் 
என்னின் 
உடைந்த கனவுகள்..!

திசை மாறி
பயணம் மாறி
துணை மாறி
தொலைத்த 
தொலைந்த உறவுகள் 
வாழ்வோடு உண்டு!!

இதனின் நினைவுகள் 
மட்டுமே என்னோடு  உண்டு..!
என் வாழ்வோடு உண்டு..!

Monday 3 October 2016

உலகம் பயில்வது..!



எப்போதும் என்றிட முடியாது
எப்போதேனும் தோன்றிடும்!

எப்புள்ளியில் தொடங்கிற்று
பெண் நேசம்
என்னோடு..!

பள்ளியில் தொடங்கிற்றோ?

அறவே இல்லை..!
சிறு வயது
சிந்தனைகள்
இயற்கையோடு இருந்தது
இயற்கையாய் இருந்தது..!

பள்ளி தோழன் பிரிந்து
பெற்றோர் பிரிந்து
பழகிய ஊர் பிரிந்து
தூரம் போகிறேன்!

கல்லூரியில் அரும்பியதோ?

அரும்பு மீசை
அரும்பிய காலம்!
உலகம் படிக்க விரைகிறேன்
கல்லூரிக்குள்!

குயவன் வீட்டு மண்சேர்
மனம் அது!

எதிர்பால் பார்க்கையில்
எதிர்பார்ப்புகள்
எகிர்வது நிஜம் தானே!

எதிர்ப்புகள் வலுத்தாலும்
எதிரிகள் அமைந்தாலும்
எதிர்பால் ஈர்க்கப்படுகின்றேன்!!

பதின்மன் பருவத்து
பெண்டிர் கண்டு
புருவம் உயர்த்தி
உருவம் கொள்கிறேன்!

தோழனும் தோழியுமாய்
துவங்குகிறது
நகர்கிறது நட்புடனே
கல்லூரி நாட்கள்..!

கொஞ்சம் கொஞ்சமாய்
குயவன் வீட்டு மண்
பானையாகிறது.. !

தூரங்களில் தொலைகின்றதோ..?

உலக படிப்பு முடிந்து
உலகம் சுற்ற
தொடங்குகிறேன்!!

என்னின் உலகங்கள்
நானே உலகங்கள்
என்றிட்ட என் உறவுகள்
விடுத்து..!

தொலை தூர பயணம்
தூரங்களில் பாரம்
கொள்ளும் மனது.!

தொலைந்தே போகும்
இதயங்களில் இருந்த
உறவும்
கலைந்தே போகும்
இதய கனவும்..!

முறைகள் அற்று போன
இவ்வுலகில்
ஒவ்வொரு முறையும்
பெண்ணின் அன்பும்
பண்பும் ஆழ பருகினேன்!

பிரிகையில் சுயம் என
நலம் கண்டு
ஆழ விழுகிறேன்.!

மீள பழகையில்
மீண்டும் பெண்மை
படிக்கிறேன்..!

கருச்சிதைவு கொண்டேன்
என் இதய கூட்டில்
சுமந்த என்
காதல் குழந்தைகளை!!  

கருச்சிதைவின் வலி
கண்டேன்
கொண்டேன் நானும்..!

சதை பிண்டமென கண்டதில்லை
கதை சொல்லி கொண்டதில்லை
பெண் மதிப்பு
பிறவி குணமென..!
பெண் மனசு
பிறவி குருடென..

உலகம் பயில்வது எளிது
பெண்மை அறிவது அரிது!

புரிதலில் என் பயணம்
தொலைக்கிறேன்
புரிகையில் என் வாழ்வு
தொலைக்கிறேன்
உலகம் மறக்கிறேன்..!
வாழ்வில் தொலைகிறேன்!

Tuesday 27 September 2016

தென்னானுடைய சிவனே..!


தென்னானுடைய சிவனே..!
என்றும் என் நாமம் சிவனே!!
வேண்டுகிறேன்!
எனக்கே எனக்காய்
ஒரு வரம்..!

இஃது உன்னோடு
என்னின் கடைசி வேண்டுதலாய்
கூட இருக்கலாம்
நம்மின் கடைசி சந்திப்பாகவும்
இருக்கலாம்!!

ஏதேனும் ஓர் மாயம் செய்து
என்னையும் அவளையும்
சேர்த்துவிடு..

கிருஷ்ணனாய்
பாண்டவ போரில்
இராமனாய் இலங்கையில்
என ஏதேனும்
ஓர் பிறவி கொண்டு....
என் வேண்டுதல் கண்டு!!!!

அஃது அரங்கேறிவிட்டால்
நான் காதல் செய்யும்
நீவிரும்
அவளும்
என்னோடு இருப்பீர்கள்!!..

முடியாது ஆகின் எனச்சொல்லி
எல்லா வாயில்களையும்
அடைத்தீர்களே ஆனால்..

இன்றோடு என்
சுவாச காற்று வாயிலை
அடைத்து விடவும்

என் உயிரென எண்ணி
காதல் கொள்ளும்
நீவிரும் அவளும்
இல்லா
என் உலகில்
நான் இருப்பதை விட
இறப்பதே மேல்..!!

Monday 26 September 2016

கிடைத்தல்..!

தவறுதலாக கூட 
என்னை தவறவிடாதே
மீண்டும் கிடைத்தல்
அரிது..

கொஞ்சமென மீண்டு
மீண்டும் கிடைத்தாலும் 
அதே நான் 
கிடைப்பதில்லை இனி..!

ஒரு போதும்..!
ஒரு பொழுதும்!

Friday 23 September 2016

என் ஆசான்..!

என் முதல் ஆசான்..!
தேறுவேனோ நான் என்று
எண்ணிய என் மன கணக்குகள்
யாவும் நிர்மூலம் நீ
ஆக்கினாய்..!
உன் கணக்குகளில்!!

என் அதிகாலை சூரிய
விடியல்கள் யாதும்
உன் சிரிப்பின்
ஒளியோடு தான்
தொடக்கினேன்!!
அஃதே என்
வாழ்வின் தொடக்கத்தின்
ஒளி என தெரியாமல்!!

கணித முட்டாள்
தானே நானும் !
இல்லை என நீயும்
நேரடி ஆதாரம் தீட்டி
என்னை முதலாய்
கொண்டு சென்றாய்..!

மோசஸ் நீயோ...!
உன் கனிவுகளிலும்
கணிதங்களிலும்
மோகம் கொள்ள செய்தாய்!!
இன்று மோசம்
செய்து சென்றாய்..!

மீண்டும் உன்னை காண
எண்ணிடும் என்
மன கணக்குகள் யாவும்
கலைத்தாய்!!
கலையா தூக்கம் கொண்டாய்..!
கலங்கவும் செய்கிறாய்..!
எங்கனம் காண்பேன் இனி!!

ஏதும் அற்ற
ஏதும் சரியும் அற்ற
என் வெற்று வினா தாள்களிலும்
தெரிந்த உன்
மதிப்பீடுகளின் மதிப்பெண்கள்
என்னில்
ஆழமாய் தெரிந்ததே..!

கடைசியில் கோடிட்ட
உன் ஆசைகள்
நிஜமென ஆனதே
என் மதிப்பெண்களில்..!

இதுவே,
இன்று என்னோடு மட்டுமே.
மிச்சம் இருக்கும்
நம்மின் ரகசியம்!

எங்கனம் உரைப்பேன்!
கணிதங்களில் கழிகிறேன் ஐயா!!

----Request by Domnic for his Teacher Moses.

Thursday 1 September 2016

காகமென கரைகிறேன்

இரு பெரும் றெக்கைகள் 
கொண்ட ஓர் 
நீள 
வெள்ளை பறவை 
என் காதல் பறவையை 
பிரித்து சென்றது..!

வெள்ளை பறவையின் 
திரவியம் தீரும் நேரம் 
தரை இறங்கியிருக்க கூடும்
நீ - என் காதல் பறவை!

உன் காதலும் தீர்ந்ததோ 
தரை இறங்கியதும்..!

காகமென உன் காதல் 
வேண்டி கரைகிறேன்..!
உன் காதலும் கரைந்து
விட்டதோ...

உன் வாழ்வோடு
என் காதல் கறை 
என 
எண்ணம் கொண்டதோ 
உன் மனம்...!

பேச வார்த்தைகள் 
என்னோடு நூறாயிரம்..
மௌனங்கள் உடைத்தெறிவது 
எப்பொழுது நீ..!

இப்பொழுது இனி வாராதே..!
நிகழ்ந்த நினைவுகள் 
இனி நீ கூற 
எங்கனம் கோர்ப்பேன்
தவறவிட்ட பொழுதுகளை..!

தவறும் பொழுது 
புரியாதோ..
சுயம் தாண்டி 
வெளியே வருமோ 
உன் மனம்..

வாசலில் காத்திருகிறேன் 
உன் வார்த்தைகளுக்காக..!
காகமென கரைகிறேன்
உன் காதலுக்காக..!

Wednesday 31 August 2016

பயணங்கள் முடிவதில்லை..!

பரிச்சயமும்
அறிமுகமும் அற்ற
முகங்களோடு
புதியதொரு பயணம்!!

சில பயங்களோடும்
தயக்கங்களோடும் தான்
நானும் தொடக்கினேன்..!

இன மொழி கடந்து
சங்கீதங்களில் நாம்
சங்கமம் ஆன நொடிகளில்
புரிந்தது
பெரியோர்களின் பேரன்பும்
பெருமனசும்...!

வயதின் தாழ்வாரம்
பாராமல் வாஞ்சையோடு
பழகிய மூத்தோர்களுக்கு
நன்றி..!

இயேசுக்கள் கணபதி
ஆன தருணங்களும்..
கருத்தம்மா சோகம் மறைத்த
குருவம்மாக்களும்..
பார்வைகளில் பன்முகம்
கொண்டு விவரித்த
விலாங்கு மீன்
கண்காரிகளும்...

எப்பொழுதும் முன்னின்ற
இளவட்டங்களும்..
கூச்சம் நீக்கி மேடையேறிய
உள்ளங்களும்...
ஒரு பொழுதும் அகலாது
என் இதயம் விட்டு..

நாட்களின் நீளங்கள்
நாமே அறியாமல்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து குறைந்தே போனது...

இன்று விழிக்கையில்
கடைசி நாள் என்னும் சோகம்
தவழ்கிறது என் இதய
பரண்களில்...

நால்வர் என வந்து
நாற்பதோடு திரும்புகிறேன்..

வாழ்க்கை வட்டத்தின் சுற்றுகளில்
எங்கேனும் ஓர் புள்ளியில்
யாரேனும் நான் மீண்டும்
சந்திக்க கூடும்..

பயணங்களின் நினைவுகளை
அசை போட போகும்
அந்த நொடிகளுக்காக
நானும் காத்திருக்கிறேன்..

அதன் மட்டும் நினைவுகள்
தாங்கி இருக்கிறேன்..

புது உறவுகளுக்கு நன்றி!
என் வாழ்வின் புது வரவுகளுக்கு நன்றி..!

வசீகர குரல் கொண்ட ஆர்டிக்கு நன்றி..
எப்பொழுதும் சிரிப்பு பூ நீட்டிடும்
தேரோட்டி பெர்ரிக்கு நன்றி..

பயணங்கள் முடிவதில்லை
மீண்டும் சந்திப்போம்
ஓர் இனிய பயணங்களில்..

---EURO TRIP

Wednesday 24 August 2016

அடைமழை..!



அடைமழை பெய்து முடிந்து
அந்தி சாயும் பொழுதென
என் வீடு

ஆட்கள் அற்று போன
என் வீதியெங்கும்
மழை நீர் மட்டும்
தேங்கியிருக்க...

நிஜ வானமும்
மழை நீரில் மிதக்கும்
வானத்து பிம்பமும்

நிலவு அற்று போன
என்
ரெட்டை வானங்களும்
வெறிச்சோடிய
மேகங்களோடு..!

அடை மழை ஓய்ந்த
அறிகுறியாய்

வீட்டு முற்றத்தில்
சேர்த்த மிச்ச
மழை நீரை
துளியென நான்
உதிர்கின்ற நேரம்..!

மற்றுமொரு
அடைமழை  தனை
என் வீட்டு கூரை தாங்காதே
உயிர் கூடு உறங்காதே..

போதும் இந்த
அடைமழைகள்..!
இனிமேல் எனக்கு
தனியென வாட்டும்
கோடையே போதுமே!!
மழை வாடை கூட வேண்டாமே!

Thursday 18 August 2016

கனவு வாழ்க்கை!!


உரிமை எடுத்துக்கொள்ள 
கோரி
நீ நடத்திய கோரிக்கை
போராட்டங்களும் 

கோபங்கள் கொள்ள 
சொல்லி உன் 
கொஞ்சும் கெஞ்சல்களும்

நான் உனது என்னும்
வாஞ்சையில் 
உன் வசமாகி
போன நானும்!

நெஞ்சோடு இன்றும்
தென்றல் காற்றென வீசும்..!
நீ அற்று போன வெற்றிடங்கள்
தேடி நிரப்பும்!

உரிமை மீறல்கள்
என் நடவடிக்கைகள் 
என்னும்
உன்னின் உதாசீனங்கள் கண்டு 
என் நிலை நானும் உணர்ந்து
கொஞ்சம் நகர்ந்தே கொண்டேன்!

கண்ணோரத்து ஈரங்களும்
நெஞ்சோரத்து இரக்கங்களும்
கருவிழியின் கடைசி 
கண்ணீரில்
கரைந்தே போனது!

என் வாழ்க்கை வழித்தடங்களின்
வலி அறிந்தவள் நீ!
அறிந்தும்
மீண்டும் சோகங்கள்
கொணர்ந்தாயே!!

ஊருக்கு என்று பேருக்கு 
ஒட்டி வைத்த
ஒற்றை புன்னகையும்
ஒடுக்கப்பட்டது!!

வீரியங்கள் அற்று போன
உன் வார்த்தை
விதைகளில்
என் விருட்ச கனவு
கலைந்தே போனது!

விவரம் அறியாமல்
நான் நம்பியிருக்க கூடும்
உன்னோடு சேர்த்து
உன் வார்த்தைகளையும்..

இனி கனவுகளின்
வாழ்க்கைகளை
உன் வார்த்தைகளில்
விவரிக்காதே!

நிழல்கள் என் கால்களுக்கு
இதமும் இடமும் தரலாம்!
நிஜங்கள் மட்டுமே என்
கால்களுக்கு
நிரந்தரம் தரும்!

நின் நிஜங்களோடு
நான் என் நிரந்தரம் 
அறிகிறேன்!

Thursday 21 July 2016

அடுத்த விடியலுக்குள்!!

மாறியாகத்தான் 
வேண்டும் நான்
இந்த நொடியில்..!

ஏன்?
யாருக்காக?
அடுத்த விடியலுக்குள் 
இது சாத்தியமா?

ஆனாலும் அந்த 
புதிய விடியலின் 
கிழக்கு பொழுதுகள் 
வெண்கதிர்களால் வெண்சாமரம் 
கொண்டு இயற்கையை 
தாலாட்ட துவங்கும்முன்

என்னுள் உள்ளவையெல்லாம் 
அறுத்தெறியவேண்டும்!

எச்சில் இலையாய் 
என்னை சுமந்து வந்து
இங்கே கொட்டியது யார்!

அறிவேன் நானும்
நான் மட்டுமே மூலகாரணம் 
என்று!

என் காதல் மட்டுமே 
எல்லா ரணங்களுக்கும்
ஆகா பெரும் தொடக்கம்!!
நானும் குழந்தைதானே 
உன் மடியில்!!

மாறியாகத்தான் 
வேண்டும் நான்.
அடுத்த விடியலுக்குள்!!

நெகிழ்ந்த நினைவுகள்..!

நெருக்கம் கூடி
நெஞ்சம் தேடிய நின் 
பார்வைகள் 
அறிவோம் யாமிருவரும்..! 

நிற்கின்ற இடம்தனின் 
நிரந்தரம் புரியாமல் 
காற்றும் கூட வித்தியாசம் 
காட்டுகிறது!

சுற்றம் மறைத்து 
சூழல்கள் மறந்து 
நாமாய் நம்மை சுற்றிய 
நிமிடங்கள்!

என் எல்லைகள் 
தாண்டிய 
விபரம் அறிகிறேன் 
உன் வார்த்தை தீண்டல்களில்!

நெருடல் கூடி உயிர் 
நடுங்க நானும் 
நீயும் பேசினோம் 
தனித்தனியே!

முன்னின்று நான் நிற்க 
திரும்பிய திசைகளில் 
புரிகிறது என் நிலைமை!

பரிகாசம் கூறும் பார்வைகள் 
மத்தியில் கூனி 
குறுகலானேன்!

சுற்றார் பார்வைகளில் 
ஏளனம் கண்டு 
ஏமாற்றம் கொண்டேன் 
ஏன் மாற்றம் கொண்டேன்!

அடி முன்னெடுக்க 
ஆயிரம் யோசனைகள் 
என்னோடே!

கண்டால் தானே சோகம் 
கேட்டால் தானே கோவம் 
உரையாடினால் தானே 
உதாசீனங்கள்!!

சிறிதே ஆயினும் 
மறந்தா போய்விடும்
நாம் சிரித்து மகிழ்ந்த 
அணைத்து நெகிழ்ந்த 
நினைவுகள்!

உன் அவன் காணாமல் போனான் 
என் அவள் தொலைந்து போனால்!
இனி 
அழுகைகள் இருவரோடும் 
இரு நெஞ்சின் வேரோடும்!

Wednesday 20 July 2016

அவதாரம்..!

முதல் முறை 
உன் முன் 
அவதாரம் பூசிய 
என் முகம்!!

சங்கடம் மறைக்க  
பூசிய சந்தோசம் 
சற்றே கூடி என்  
முகத்திரை கிழித்திட 
தடுமாறி தான் 
போனேன் நானும்!

கதை புரிந்துவிடும் 
இனி ஏதும் 
கூறிட வேண்டாம்! 
இக்கவிதையிலும் தான்!

முதல் முறை 
அவதாரம் பூசிய என் முகம் 
மேடை ஏறிய என் நடிப்பு 
முகத்திரை கிழிக்காமல் 
இருந்திடட்டும்
கவிதையிலேனும்!!

காதல் குழந்தை!

நேரக் குறைவின்
காரணமாய்
என்னை அறியாமல்
தலைவிரித்து சாமியாடும்  
என் காதல் தனை

பக்தியென பார்ப்பதும்
பயமென ஒதுக்குவதும்
உன் பார்வை
தேர்வுகளில் உண்டு!

இனியேனும்
என் காதல்
குழந்தையோடு சண்டையிடாதே
உன் அணைப்புகளில்
அதன் கண்கள் கண்டதுண்டா!

பேச முயன்று உழன்று
தோற்று போன வார்த்தைகள்
யாவும் விழி வழி வெளியேறி
உன் நெஞ்சு கூட்டுக்குள்
இறங்குவதை!

இல்லையெனில்
அடுத்த நெருக்கங்களில்
கண்கள் பார்த்து கொண்டே
கட்டி அணை!

சூரியனின் பிரகாசங்களும்
நிலவின் குளிர்ச்சியும்
அதனின் நீ காண்பாய்!

உன் கோவங்களில்
பிரிவின் அச்சம் கொண்டு
பரிதவித்த
காதல் குழந்தையின்
கண்களில்
நயாகரா நீரூற்று
ஓடியது நிஜம்!

உன் அருகாமைக்காக
மட்டுமே சத்தமிடும்..
ஒரு பொழுதும்
நெறியற்ற எண்ணங்களின்
வாள்களோடு அல்ல!

உன்னோடு நான் வாங்காமல்
மிச்சம் விட்டிருக்கும்
சிறு சிறு
யாவும் என் நியாபக
துளிகள் உனக்காக!

ஒரு போதும் கொணர்ந்திடாதே
மீண்டும் என்னிடத்தில்!

பிரியும் நாளில் இருந்து
நான் அழ போகும்
நிஜம் யார் அறிவார்
யார் எனை தேற்றுவார் 
உனை தவிர!

Tuesday 19 July 2016

ஓர் புள்ளியில்!!


ஏதோ ஓர் புள்ளியில்
ஒன்றென இருந்து
பரிச்சயம் அற்று
பரஸ்பரம் பேசாது
கடந்து போன நாம்!

காலங்களும் நாடுகளும் கடந்து
காரணங்கள் அற்று
உறவென ஆனோம்- நட்போடு!

புரியாத பிரியம்
எப்போதும்
பிரியும் போது புரியும்!
இப்போது உன் அன்பில் புரிகிறது!
உறவென மட்டும் அன்றி
உணர்வெனவும் உடன் வருகிறோம்!

பிரபஞ்சத்தின்
உணராத மிச்ச அழகும்
அறிந்திராத அதிசயமும்
ஆண் பெண் நட்பில்
ரகசியமாய் ஒளிந்துருக்கிறது!

வான் கொண்ட மட்டும்
நீளும் ஆகாயமாய்
நீளட்டும் நம் நட்பு!

பின்னாளில் ஓர் புள்ளியில்
சகிதம் அமர்ந்து
எண்ணிலடங்கா வானத்து
நட்சத்திரங்கள் என
நம் நட்பின் நினைவுகள்
எண்ணிடுவோம்!

அறிமுகம்!!

முகம் பழகி ஆண்டுகள்
பல தேய்ந்திருந்தாலும்
அறிமுகம் ஆகி அரை திங்கள்
ஆகாத வேளையில்
இனமறியா உள்ளுணர்ச்சி நம்மோடு!

மென்சிரிப்பு கொண்டு நீயே
தொடக்கினாய்!
ஆழ் சிந்தனை கொண்டு
விலகியே நடந்தேன்!

எண்ணப் புள்ளிகள் ஒற்றுபோக
ஒற்றை கோடுகளில் பயணிக்கும்
இதயங்கள் இணைந்தது நட்போடு!

உன் அருகாமையில்
என் துன்பங்கள் துளிர்பதில்லை!
உன் தோழமையில்
என் தோள்கள் சாய்வதில்லை!

வருந்துகிறேன் இந்நேரம்
முகத்திற்கும் அறிமுகதிற்குமான
கால இடைவெளி குறித்து!