Tuesday 27 September 2016

தென்னானுடைய சிவனே..!


தென்னானுடைய சிவனே..!
என்றும் என் நாமம் சிவனே!!
வேண்டுகிறேன்!
எனக்கே எனக்காய்
ஒரு வரம்..!

இஃது உன்னோடு
என்னின் கடைசி வேண்டுதலாய்
கூட இருக்கலாம்
நம்மின் கடைசி சந்திப்பாகவும்
இருக்கலாம்!!

ஏதேனும் ஓர் மாயம் செய்து
என்னையும் அவளையும்
சேர்த்துவிடு..

கிருஷ்ணனாய்
பாண்டவ போரில்
இராமனாய் இலங்கையில்
என ஏதேனும்
ஓர் பிறவி கொண்டு....
என் வேண்டுதல் கண்டு!!!!

அஃது அரங்கேறிவிட்டால்
நான் காதல் செய்யும்
நீவிரும்
அவளும்
என்னோடு இருப்பீர்கள்!!..

முடியாது ஆகின் எனச்சொல்லி
எல்லா வாயில்களையும்
அடைத்தீர்களே ஆனால்..

இன்றோடு என்
சுவாச காற்று வாயிலை
அடைத்து விடவும்

என் உயிரென எண்ணி
காதல் கொள்ளும்
நீவிரும் அவளும்
இல்லா
என் உலகில்
நான் இருப்பதை விட
இறப்பதே மேல்..!!

Monday 26 September 2016

கிடைத்தல்..!

தவறுதலாக கூட 
என்னை தவறவிடாதே
மீண்டும் கிடைத்தல்
அரிது..

கொஞ்சமென மீண்டு
மீண்டும் கிடைத்தாலும் 
அதே நான் 
கிடைப்பதில்லை இனி..!

ஒரு போதும்..!
ஒரு பொழுதும்!

Friday 23 September 2016

என் ஆசான்..!

என் முதல் ஆசான்..!
தேறுவேனோ நான் என்று
எண்ணிய என் மன கணக்குகள்
யாவும் நிர்மூலம் நீ
ஆக்கினாய்..!
உன் கணக்குகளில்!!

என் அதிகாலை சூரிய
விடியல்கள் யாதும்
உன் சிரிப்பின்
ஒளியோடு தான்
தொடக்கினேன்!!
அஃதே என்
வாழ்வின் தொடக்கத்தின்
ஒளி என தெரியாமல்!!

கணித முட்டாள்
தானே நானும் !
இல்லை என நீயும்
நேரடி ஆதாரம் தீட்டி
என்னை முதலாய்
கொண்டு சென்றாய்..!

மோசஸ் நீயோ...!
உன் கனிவுகளிலும்
கணிதங்களிலும்
மோகம் கொள்ள செய்தாய்!!
இன்று மோசம்
செய்து சென்றாய்..!

மீண்டும் உன்னை காண
எண்ணிடும் என்
மன கணக்குகள் யாவும்
கலைத்தாய்!!
கலையா தூக்கம் கொண்டாய்..!
கலங்கவும் செய்கிறாய்..!
எங்கனம் காண்பேன் இனி!!

ஏதும் அற்ற
ஏதும் சரியும் அற்ற
என் வெற்று வினா தாள்களிலும்
தெரிந்த உன்
மதிப்பீடுகளின் மதிப்பெண்கள்
என்னில்
ஆழமாய் தெரிந்ததே..!

கடைசியில் கோடிட்ட
உன் ஆசைகள்
நிஜமென ஆனதே
என் மதிப்பெண்களில்..!

இதுவே,
இன்று என்னோடு மட்டுமே.
மிச்சம் இருக்கும்
நம்மின் ரகசியம்!

எங்கனம் உரைப்பேன்!
கணிதங்களில் கழிகிறேன் ஐயா!!

----Request by Domnic for his Teacher Moses.

Thursday 1 September 2016

காகமென கரைகிறேன்

இரு பெரும் றெக்கைகள் 
கொண்ட ஓர் 
நீள 
வெள்ளை பறவை 
என் காதல் பறவையை 
பிரித்து சென்றது..!

வெள்ளை பறவையின் 
திரவியம் தீரும் நேரம் 
தரை இறங்கியிருக்க கூடும்
நீ - என் காதல் பறவை!

உன் காதலும் தீர்ந்ததோ 
தரை இறங்கியதும்..!

காகமென உன் காதல் 
வேண்டி கரைகிறேன்..!
உன் காதலும் கரைந்து
விட்டதோ...

உன் வாழ்வோடு
என் காதல் கறை 
என 
எண்ணம் கொண்டதோ 
உன் மனம்...!

பேச வார்த்தைகள் 
என்னோடு நூறாயிரம்..
மௌனங்கள் உடைத்தெறிவது 
எப்பொழுது நீ..!

இப்பொழுது இனி வாராதே..!
நிகழ்ந்த நினைவுகள் 
இனி நீ கூற 
எங்கனம் கோர்ப்பேன்
தவறவிட்ட பொழுதுகளை..!

தவறும் பொழுது 
புரியாதோ..
சுயம் தாண்டி 
வெளியே வருமோ 
உன் மனம்..

வாசலில் காத்திருகிறேன் 
உன் வார்த்தைகளுக்காக..!
காகமென கரைகிறேன்
உன் காதலுக்காக..!