Tuesday 29 November 2016

ரகசிய சிநேகம்..!


ரயிலுக்கும் எனக்கும்
எப்போதும் ஓர்
ரகசிய சிநேகம்..!

நண்பனின் தோள் என
என் சோகங்கள்
தாங்கிடும்..!

கவலைகள் மறக்க..
கண்ணுறங்க..
தாலாட்டு பாடிடும்..!

அதனின் தண்டவாள
தாளச் சத்தங்கள்
சங்கீதங்களாய்...

ஜன்னல் ஊடே
கடந்து போகும்
சோடியம் வெளிச்சங்கள்
மின்மினி பூச்சிகளாய்...!

அதனோடு செல்கையில்
எப்பொழுதும்
கற்பனைகள் கரை
கடந்து ஓடிடும்...!
கவிதைகள் ஊற்றெடுக்கும்..!

எல்லா ரயில் பயணத்திலும்
காதல் கவிதைகள்
எழுதிடும் மனம்..!

இம்முறை என் காதலை
ரயிலோடு
இன்னொரு பெட்டியாய்
இணைத்து கொள்கிறேன்!!!

கடல் கடந்திடும்
விமான பயணத்தில்
கூட தோன்றியதில்லை..!

சிநேகிதனின் சிநேகிதன்
போல...
ரயில் சிநேக
நண்பர்கள் வாழ்வில்
உண்டு..!

எல்லோர் வாழ்வும்
ஓர் கதை சொல்லும்!
வாழ்க்கை பாடம்
சொல்லும்..!

என் வாழக்கை பயணத்திலும்
கதைகள் உண்டு..!
கதையின் கரு
உவமைகளாய் ரயிலோடு...!

தத்தம் நிறுத்தங்களில்
இறங்கியதோடு சிநேகம்
மறந்தோர் சில உண்டு..!

நிறுத்தங்கள் வரும் வரையில்
வேண்டி சிநேகம் வளர்த்தோர்
பல உண்டு...!

தனி ரயில் பயணத்தில்
சில சிந்தனைகள்
எப்போதும்
என்னோடு பயணிக்கும்...!

பயணத்தின் பின் செல்லும்
பொருட்களோடு
ஒரு போதும் போட்டியிட்டு
விட்டு சென்றதில்லை
நினைவுகள்..!

சில சமயங்களில்
யாரிடமும்
சொல்லிட முடியா
காரணங்கள் கொண்டு
வெற்றிடம் குடியேறும்
மனதோடு..!

தாய் மடியென...
தோழனின் தோள் என..
தோழியின் நேசம் என..
காதலியின் வாசம் என..

ஒவ்வொர் முறையும்
ரயில் பயணம்
சின்னதாய் சிலிர்க்க வைத்து
உயிர்ப்போடு இருக்க
உதவுகிறது..!

ரயிலோடு
இன்னொரு பெட்டியாய்
இணைந்து கொள்கிறேன்!!!

No comments:

Post a Comment