Monday 12 December 2016

கூவுகிறேன்..!


உன் பெயர் கூவுகையில்
சுமை தா
என்று கேட்டறிந்தாயோ..!
ஆதலின்
காதல் சுமை தந்தாயோ..?

உன்னோடு பேசுகையில்
விட்டு பறந்து சென்ற
பேடைபெயர்
சொல்லி அழுதேனோ.?

ஒவ்வொரு அழுகைகளிலும்
நீயும் ஓலமிடுவாய்..
என் சோகம் தாங்கி..
என் தேகம் தாங்கி
உன் தோள் கொண்டு..!

அணை கட்ட முடியா
உன் ஆசைகள்
ஒப்புவித்தாய்..!
சற்று யோசி என்றாய்..!

அன்று,
அளவுகளற்று யாசித்தும்
யோசிக்காமல் போனாயே..!

மீண்டும் வராதே இவ்வாழ்வு..!
தேடிடும் உயிர் நீ தானே..!
வந்திடு என்னோடு
வாழ்வோம் நூறாண்டு..!

பேசாத வார்த்தைகள்
பேசிட வேண்டிய கதைகள்
நூறாயிரம் உண்டு
என்னோடு..!

இன்று
இறந்த காலங்கள்..!
இறந்த காதல்கள்..!
உன் பேர் சொல்லி
மட்டுமே கூவுகின்றேன்..!

நித்தம் என் கனவில்
நீ உலா வருகிறாய்..!
உன் நினைவுகளில்
கொல்கிறாய்..!

ஏன் என்னை தனிமையில்
விட்டு போனாய்..!
எரியும் நெருப்பில்
சாவு வேண்டுகிறேன்..!
உன்னை தொலைத்த பாவி
நானாகிறேன்...!

இரவின் உறக்கத்திலும்
வெளிச்ச விடியலிலும்
உன் பெயர் கூவுகிறேன்...!

Wednesday 7 December 2016

இலக்கண பிழை..!


எல்லா உண்மைகளும்..
உண்மை காரணங்களும்
நீ மட்டுமே அறிவாய்..!

அவ்வுண்மைகள் உன்னை
ஊமை ஆக்கியதோ..!
அதனின் துணை கொண்டு
உண்மை மறைத்தாயோ..?

வாய்மை ஊமை ஆகி
பொய் உரைத்து விடின்
மெய் என ஏற்பாயோ??

பொய் உரைத்து
புது வாழ்வு
தேடிடும் ஆசைகள்
எனதோடு இல்லை..!

ஏமார்ந்து பழகியதால்
ஏமாற்றத்தின் வலி
அறிவேன் நான்..!
எக்காரணம் கொண்டு
யாரையும் ஏமாற்றிடாது..!

கூறிய நீள நிஜங்கள்
மன எண்ணங்களையும்
கனவின் வண்ணங்களையும்
மாற்றியதோ...?

அஃது,
அழகெனவே
அமுதனவே
நீல வண்ண பொய்கள்..

நிஜங்கள் என
சொல்லி இருப்பின்
ஏற்று இருப்பாயா..?

உதடுகளில் உதிர்ப்பது
நாக்கின் தயவில்
சந்தர்ப்பத்தில் வந்தது அல்ல..!
இதயத்தின் வாயில் தாண்டி
வந்த வார்தைகள்..!

உவமைகளோ உருவகங்களோ
கொண்டு உருவங்கள்
உருவாக்கவில்லை..!

காண்கின்ற யாரோடும்
சொல்லியதில்லை..
வாழ்வோடு வரும் உறவுகள்
மட்டும் அறிந்த உண்மை..!

சொல்லிடும் நேரத்தில்
இவ்வண்ணம் தோன்றிய
எண்ணம் என்னோடு இல்லை..!

பிற்போக்கு சிந்தனையில்
சிதைந்தவளா நீ?
முற்போக்கு சிந்தனைவாதி..
சிந்தனை சீர்திருத்தவாதி...
என்றல்லவா எண்ணியிருந்தேன்..?

உன் வயதின்
வேகம் தாண்டிய
உன் பக்குவத்தில்
பல வேலைகளில்
என் புருவங்கள் உயர்த்திருக்கிறாய்..!

சாட்சிகளும்
சாட்சிகள் கண்ட
காட்சிகளும் உண்டு..
நியாயம் நிரூபிக்க
ஆதாரங்கள் ஏதும் இல்லை..!

ஞானப்பார்வை கொண்டு...
தெளி நீர் பார்வை கண்டு..
காலங்கள் கடந்து
கடந்த கால பார்வை
விடுப்பாயோ..?

இல்லை
இலக்கண பிழை
இவன் என்று
என்னின் அத்தியாயம்
முடிப்பாயோ..!

Tuesday 6 December 2016

அன்பிற்கினிய தோழியே..!


அன்பிற்கினிய தோழியே
அழுதிடாதே..
ஐயம் கொண்டிடாதே..
ஒரு போதும்..!

யாரும் அற்று
போய் விடுவோமோ என்ற
உன் அச்சம் தவிர்..!

ஆண்டுகள் தாண்டி...
பேசாமலே போய்
விடுவோமோ என்றெண்ணி
பேசாமல் போன
ஒட்டுமொத்த கதைகளையும்
நீயே பேசினாய்..!

ஆண்டுகள் தாண்டி...
நினைவுகள் தோண்டி
அழுது அழவைத்தாய்..!

ஆண்டுகள் தாண்டி..
நம் நினைவுகள் தோண்டி..
உன் அழுகையிலும்
விடை வேண்டிய
வினாக்களிலும் - பின்னோக்கி
பிடித்திழுத்து சென்றாய்..!

மிக சில சமயங்களில்
மட்டுமே எனக்கு
கிட்டிய
கிட்டுகின்ற பாக்கியம்..!

கடந்த கால
நினைவுகள் செல்கையில்
இன்புற்று புன்முறுவல்
புரிந்த தருணம்.!!

அவ்வண்ணமே ஓர்
நினைவுப்பயணம்
செய்தமைக்கு நன்றி..!
என்னுள் மகிழ்ச்சி
கொய்தமைக்கு நன்றி..!

இயலாமையின் வலியில்
இயந்திர வாழ்வு போதும்..!
வழிகள் உன்னோடு தான்..!

செந்தூரம் ஏந்திய
என் நெற்றிக்கண் அறியும்
உன் விரல்களின் ஸ்பரிசமும்
உன் விழிகளின் பாசமும்
உன் இதயத்தின் நேசமும்...!

காதலியோடு செல்கையில்
கவலை ரேகைகள்
ஆட்கொண்டுவிடும்..!

சொந்தங்கள் சுற்றங்கள்
அறிந்திடாத காதல்...!
ஆகையின் யாரேனும்
கண்டிட நேரிடுமோ
என்று..!

நல்ல வேலை நட்பிற்கு
அந்த கவலை இல்லை..!
தோழி என்று உரக்க
சொல்வதில் என்னோடு
எப்போதும் ஓர் ஆனந்தம்..!

உன் திமிர் பேச்சுக்களும்..
எந்த விவாதத்திலும்
அடங்கி போயிடாத
உன் எதிர் பேச்சுக்களும்..!
அவ்வளவும் என்னால்
ரசிக்கப்பட்டவை..!

கவலை ரேகைகள்
யாவும் நேற்றோடு
களைந்திடு..!
உயிர் தோழி உருவம்
கொண்டவள்!

என்றும் நீ 
தோள் சாய 
ஓர் தோழன் உண்டு
என்று உணர்ந்து அறிந்திடு..!
புன்னகை பூத்திடு..!

-நட்புடன்
இரா.செந்தில்குமார்.