Monday 3 October 2016

உலகம் பயில்வது..!



எப்போதும் என்றிட முடியாது
எப்போதேனும் தோன்றிடும்!

எப்புள்ளியில் தொடங்கிற்று
பெண் நேசம்
என்னோடு..!

பள்ளியில் தொடங்கிற்றோ?

அறவே இல்லை..!
சிறு வயது
சிந்தனைகள்
இயற்கையோடு இருந்தது
இயற்கையாய் இருந்தது..!

பள்ளி தோழன் பிரிந்து
பெற்றோர் பிரிந்து
பழகிய ஊர் பிரிந்து
தூரம் போகிறேன்!

கல்லூரியில் அரும்பியதோ?

அரும்பு மீசை
அரும்பிய காலம்!
உலகம் படிக்க விரைகிறேன்
கல்லூரிக்குள்!

குயவன் வீட்டு மண்சேர்
மனம் அது!

எதிர்பால் பார்க்கையில்
எதிர்பார்ப்புகள்
எகிர்வது நிஜம் தானே!

எதிர்ப்புகள் வலுத்தாலும்
எதிரிகள் அமைந்தாலும்
எதிர்பால் ஈர்க்கப்படுகின்றேன்!!

பதின்மன் பருவத்து
பெண்டிர் கண்டு
புருவம் உயர்த்தி
உருவம் கொள்கிறேன்!

தோழனும் தோழியுமாய்
துவங்குகிறது
நகர்கிறது நட்புடனே
கல்லூரி நாட்கள்..!

கொஞ்சம் கொஞ்சமாய்
குயவன் வீட்டு மண்
பானையாகிறது.. !

தூரங்களில் தொலைகின்றதோ..?

உலக படிப்பு முடிந்து
உலகம் சுற்ற
தொடங்குகிறேன்!!

என்னின் உலகங்கள்
நானே உலகங்கள்
என்றிட்ட என் உறவுகள்
விடுத்து..!

தொலை தூர பயணம்
தூரங்களில் பாரம்
கொள்ளும் மனது.!

தொலைந்தே போகும்
இதயங்களில் இருந்த
உறவும்
கலைந்தே போகும்
இதய கனவும்..!

முறைகள் அற்று போன
இவ்வுலகில்
ஒவ்வொரு முறையும்
பெண்ணின் அன்பும்
பண்பும் ஆழ பருகினேன்!

பிரிகையில் சுயம் என
நலம் கண்டு
ஆழ விழுகிறேன்.!

மீள பழகையில்
மீண்டும் பெண்மை
படிக்கிறேன்..!

கருச்சிதைவு கொண்டேன்
என் இதய கூட்டில்
சுமந்த என்
காதல் குழந்தைகளை!!  

கருச்சிதைவின் வலி
கண்டேன்
கொண்டேன் நானும்..!

சதை பிண்டமென கண்டதில்லை
கதை சொல்லி கொண்டதில்லை
பெண் மதிப்பு
பிறவி குணமென..!
பெண் மனசு
பிறவி குருடென..

உலகம் பயில்வது எளிது
பெண்மை அறிவது அரிது!

புரிதலில் என் பயணம்
தொலைக்கிறேன்
புரிகையில் என் வாழ்வு
தொலைக்கிறேன்
உலகம் மறக்கிறேன்..!
வாழ்வில் தொலைகிறேன்!

No comments:

Post a Comment