Tuesday 21 February 2017

நின் அகம் புறம் அறிந்திடாமல்...!



பழிச்சொல் சாமரம்
வீசியதில்லை
எந்நிலையிலும் நானறிந்து..!

ஏனெனில்..
உன் வாஞ்சைகளில்
வஞ்சங்கள் கண்டதில்லை...!

சுய சுற்றம் கொண்ட
பாச நலத்தின்
விலை என்னுயிராகி
போய்விடின் என்றுணர்ந்தின்
நிஜம் மாறியிருக்குமோ...?

தொடர்ந்திடும்
நித்திரை நினைவுகள்
தொலைத்திட்ட உறவுகள்
நித்தம் என் மடிமீது
நித்திரை வார்த்திருக்கும்...!

எந்நிலையிலும்
பழிச்சொல் சாமரம்
வீசிடமாட்டேன்...!

வார்த்தைகளை
வருத்தங்களின் வடிகால்
என கொண்டு...!
நினைவுகளில் சமரசம்
பூண்டு..!
தன்னிறைவு கொண்டு..!

இலக்கண பிழை
தான் ஆயினும்
மீளப்பெற்றிட முடியா
பிழையாகி...!
பிழை கொண்ட வாழ்வே
வாழ்வோம்...!

மிகையென தோன்றினும்...
எதிரிலே எனை நீ காணினும்..!
எதிரியாய் எனை நீ காணினும்...!

யாதுமாகி நீயும் நின்
நினைவும் தொடர்ந்திட...
இருள் நிழலென
தொடர்ந்திடுவேன் - நின்
அகமும் புறமும்
அறிந்திடாமல்...!

Monday 20 February 2017

நாள் காட்டி...!


நீ இன்றி
என் நாள் காட்டி
நகர்ந்திடாது..!

வார்த்தைகள் அசீரிரியாய்
என் செவிகளோடு
இப்பொழுதிலும்..!

நாளும் கடந்து
வருஷம் கூட
முடிஞ்சுருச்சு..!

உறவுகள் மாறுகையில்
உண்மைகள் உதிர்ந்திடுமோ..!
உதிர்த்த வார்த்தைகள்
உதடுகளில் உறைந்திடுமோ..!

ஊமையாகி போனதோ
உன் வார்த்தைகளும்
என் வாழ்க்கையும்..!

பிரியும் நாள்மட்டிலும்
புரியவைத்திட முயன்ற
நடைமுறை விளக்கம்
நிஜங்களாய் காணுகையில்
புரிந்திருக்கும் என நம்புகிறேன்..!

வாய்த்திருந்த வாய்ப்புகள்
தவறவிட்ட தருணங்கள்
பாதை தவறிய இரு பாதங்கள்..!
வாழ்க்கை  தவறிய இரு மனங்கள்..!

சொற்ப நிமிடங்களில்
முடிந்து போயிட
இஃது அஃதில்லவே...!

உந்தன்
அன்போடும்
அணைப்போடும்
அரவணைப்போடும்
நான் கண்ட
ஆத்மீக நெருக்கம்...!

கொண்ட என் காதல்..
இன்னுமொரு காதல்
எங்கேனும் வந்தினும்
உன் இணைப்பெறாது..!
உன்போல்
ஓர் துணைப்பெறாது..!

நித்தம்...
கொல்லும் தனிமை..!!
சொல்லும் உன் அருமை..!

ஓர் நல்ல புத்தகத்தின்
கடைசி பக்கம்
படிக்க முடியாமல்
கனமான மனதோடு
விட்டு பிரிந்தேன்..!

ஓர் நல்ல கதை சொல்லி
நானே ஓர்
நன் முடிவோடு
செல்கிறேன்!

Thursday 16 February 2017

வெண்ணிற இரவுகள் ..!



ஒப்புக் கொள்வதில்
ஐயம் ஏதுமில்லை..!

ஏதுமில்லா என்னிடத்தில்..
ஐயம் இருந்திட
வாய்ப்பில்லை
என நன்கு நீ அறிவாய்..!

சந்தித்திடாத ஓர் சந்தர்ப்பம்..!
ஆதலின் சிறு தயக்கம்
என்னோடு..!

முன்னின்று எதிர் கொள்ளவா..?
காலம் கடத்தி
நேரம் தாழ்த்தி
அதனின் போக்கில்
சென்றிடவா..?

கேள்வி கணைகள்
தனிமையில் எனில்
என் தயக்கங்கள்
தவிர்த்திருவேனோ..?

மேற்கோள் கொண்டிராத
பொருள் தேடிடாத
நீட்சியற்ற ஆசைகள்..!
எதனின் பொருட்டு
ஆசைகள் நிறுக்கப்படும்..!

நேர்மை நேர்கோடுகள்..!
வரைமுறைகள் தாண்டாத
வார்த்தைகள்..!
எதனின் கொண்டு
மனிதம் நிர்ணயிக்கப்படும்..!
 
எதனின் எதனால்
ஆராயும் பொருட்டு
விடை தேடிடும்
வினாக்கள் இல்லை..!

அடை தேடி
அலைந்திடும்
பறவை நான்..!

இதனின் இதன்பால்
என்றின்றி
புரிதலின் பயன் பால்
மீட்டிடணும் உறவு..!

சில சமயங்களில்..
ஊருக்கென சிரித்தாலும்
கண்ணீர் வரும் நினைவுகள்..!

சில சமயங்களில்
உறங்கவே நினைத்தாலும்
கண்ணீர் தரும் கனவுகள்
மீட்டிடும் - சில
வெண்ணிற இரவுகள் ..!

Tuesday 14 February 2017

எவ்விடமும் கானகமே..!


கானகத்தின் வனப்பினிலே
இருளின் கணத்தினிலே..
காட்டொளி கண்டும்
காணாது போனேனே..!

காட்டருவி காணக்கண்டும்
கானல் நீரின்
ஓட்டத்தினில் கண்கொண்டு
பின் சென்று
கவிழ்ந்தேனே...!

அரியாசனம் துறந்தன்று
துணையும் உடன்கொண்டு
தமையனின் துணைகொண்டு
வனம் வசம்
சென்ற ஓர் வனவாசம்
உலகறியும்..!

காதல் அரியாசனம்
இழந்தன்று
பிரிந்த துணையின்
நினைவில் பிணிப்பறவையென
துணை யாரும் அற்று
வனம் சென்ற நிஜம்
என் உலகறியும்..!

இகழ்ச்சிகள் இடையில்
அஃதொன்று
அடைப்பொன்று அடித்தொண்டையில்..!

உமிழ்ந்தெடுத்து விட முடியா
உயிர் நீர் உணர்ந்தே
உரிமைகள் உதறிந்த
பயணம்..!

தொலைத்த சீதையின்
நினைவுகள் தொலைக்க
நின் பயணம்..!

தூரங்களில்
நீள் கயிறென நீளும்
நம் நினைவுகள்..!

சீதை தொலைத்த
இப்பேதை பயணம்..!!
தமையன்கள் கிடைத்தும்
கிடைத்திடா அச்சீதை..!

காதல் அரியாசனம்
இழந்தன்று தொடங்கி...
பன்னிரெண்டு
திங்கள் தனிவாசம்
முடித்து திரும்புகிறேன்..!

பொதுவென இருக்கும்
ஆசைகள் ஏக்கங்கள்
என்னோடும்..!

தொலைத்த
தாய்மடி வாசம்..!
தோழனின் சிநேகம்..!
உறவுகளின் நேசம்..!

சிறு மழை...!
மண் வாசம் உணர்ந்து..
நுகர்ந்திடும் நாசி..!
சுடு தேனீர் வேண்டி...
ருசித்திடும் இதழ்கள்..!

இவ்வாறே
சில நூறு
சின்ன சின்ன ஆசைகள்..!

இத்தனையும் தாண்டி
சற்றும் குறைவின்றி
நம் காதல் நினைவுகள்..!

வாழ்க்கை வழி தவறிய..
உன் வாழ்க்கை வழியில் தவறிய..
எம்பாதங்களுக்கு எவ்விடமும்
ஆக பெரும் கானகமே..!

எங்கெங்கு நான் போயினும்
நீ அற்று போன
எவ்விடமும் கானகமே..!

Monday 6 February 2017

வாழ்நாள் சிறந்த தூக்கம்..!


சில நாட்களின்
சிறு சிறு நிகழ்வுகள்..
மகிழ்ந்துணர்ந்த தருணங்கள்..
பெரும்பதிவென
நெஞ்சில் பதியும்..!

காலச்சுழற்சியில்
நாட்கள் நகர்ந்திட..
பதியம் போட்ட செடியன
மறவாத நிகழ்வுகள்..
மறையாத காட்சிகள்..
மரமாகி காண்போம்..!

அவ்வண்ணமே
கடந்து போன ஓர் நிகழ்வு..!
இன்று நிஜமென -
கண்முன்னே  வந்து
கண்சிமிட்டியது..!!
கண் இருட்டியது..!

ஸ்தம்பித்து போன
சில நிமிடங்கள்
கடந்து
மீண்டு வரலானேன்!!

மகிழ்வென கடந்த
அந்நாளின் நினைவலைகள்
அமிழ்ந்து அமிழ்ந்து
என் நெஞ்சோடு எழுகிறது
கடல் அலைகள் என..!

கலங்கிய பார்வை
மேல்நோக்கி
உயர்ந்த புருவங்கள்..!
சிறு பிழையும் அற்று
காட்சி கண்ணில் விரிகிறது..!

ஓர் வார இறுதியின்
விடுமுறை தினத்தின்
உதயத்தில் சந்திக்கிறோம்..!

கையிருப்பின் கடைசி
சில்லறை காசு
எண்ணி எண்ணி
செலவிடுதல் போல..!

நம்முடைய காதலின்
கடைசி வார இறுதியை
துளி துளியென
கொண்டாட தொடங்குகிறோம்..!

பிள்ளையார் சுழி போட்டு
துவங்குகிறோம்..!
விநாயகர் கோவில்
வாசலில்...

மனமுருகிய வேண்டுதல்கள்
கேட்டும் உருகிடாத
முதற் கடவுளே...!

பிரிகிறோம் என்றுணர்ந்தும்
உன்னோடே பிரிவை
தொடக்குகிறோம்..!

இருவர் பிரிவிலும்
இருவர் தனி தனியாய்
ஒருவராயினும்..
இருவரோடும் இணைந்தே
இருக்க வேண்டி
உன்னோடே பிரியமாய்
பிரிகிறோம்.!!!

உன்னோடு கழித்த
எத்தனை தினசரிகள்..!
கடைசி தினசரியின்
கணங்கள் தான்
எவ்வளவு கடுமையானவை!!
எவ்வளவு கொடுமையானவை..!!

இவ்வளவு எளிதில்
ஓர் நாள் கடந்திடுமோ..?
இத்தனை நாள் வாழ்வின்
மிக சிறிய நாளாய்
தானாய் புகுத்திக்கொண்டது
என் நாட்குறிப்பில்..!

அந்தி மெல்ல மெல்ல
மேற்கில் வானோடு
தழுவிடும் காலம் அது..!

உன்னை வீடு கொண்டு சேர்க்கும்
பொறுப்பின் காரணம்
கொண்டு பயணிக்கிறேன்..!

அப்போதேனும் அகவியிருக்கலாம்
உன்னோடே என்னை கொண்டு
சென்று விடு என..!

அரசனின் கட்டளை
வேண்டி காத்திருக்கும்
படை தளபதியின்
வாளினை போல்...

உன் வார்த்தைகளுக்காக
காத்திருந்தன
என் இமை வாள்கள்..!

சிறகுகள் அற்ற
வெள்ளை தேவதை என
வந்தாய் என் வாழ்வில் நீ..!

சிறகுகள் கட்டி
பிரித்து செல்கிறது
காலம் இன்று...!

கலைந்து போன காற்றில்
கலந்து போனவை...
கடந்த அன்றைய நிஜங்கள்...
கண்ணில் கண்ணீரோடு
பயணிக்கிறோம்!!

வாழ்நாள் பெரிய
சிறந்த தூக்கம்
என் தோள்களில்
நீ கொண்டாய்!

உறங்கும் உன் பிம்பம்
காண கண்டேன்..
கண்ணாடியில்..!

மங்கிய  நீல நிற
இரவின் வெளிச்சத்தில்
கண்ணயர்ந்து உறங்கும்
சிணுங்கல் முகம்
கண்டு மயங்குகிறேன்..!

உறக்கத்தின் மயக்கம்
தெளிந்திடா வண்ணம்
ஓர் மிதவேக பயணம்!

உந்தன் உறக்கத்திலே...
உறங்கும் உன் முகம் கண்டே...
கடைசி மணித்துளிகள்
கழிக்கிறேன் நான்..!
பத்திரமாய் வந்து
சேர்க்கிறேன்..!

உறக்கம் முடித்து
தெளிந்த உறக்கத்தில்
அழுகை தொடங்குகிறாய்..!
விரயமென தவறவிட்ட
சில மணித்துளிகளுக்காக!

தவறவிட போகும்
மிச்ச வாழ்வின்
யாசகம் வேண்டி நான்..!

தோற்று போன
நாமும்,
நம்மின் சமாதானங்களும்..!

ஸ்தம்பித்து போன
சில நிமிடங்கள்
கடந்து
மீண்டு வரலானோம்!!

உண்மை உணர்ந்து
அழுகையில் பிரிகிறோம்..!
இரு வேறு
திசை ஆகிறோம்...!
இருவரும்..!