Wednesday 31 August 2016

பயணங்கள் முடிவதில்லை..!

பரிச்சயமும்
அறிமுகமும் அற்ற
முகங்களோடு
புதியதொரு பயணம்!!

சில பயங்களோடும்
தயக்கங்களோடும் தான்
நானும் தொடக்கினேன்..!

இன மொழி கடந்து
சங்கீதங்களில் நாம்
சங்கமம் ஆன நொடிகளில்
புரிந்தது
பெரியோர்களின் பேரன்பும்
பெருமனசும்...!

வயதின் தாழ்வாரம்
பாராமல் வாஞ்சையோடு
பழகிய மூத்தோர்களுக்கு
நன்றி..!

இயேசுக்கள் கணபதி
ஆன தருணங்களும்..
கருத்தம்மா சோகம் மறைத்த
குருவம்மாக்களும்..
பார்வைகளில் பன்முகம்
கொண்டு விவரித்த
விலாங்கு மீன்
கண்காரிகளும்...

எப்பொழுதும் முன்னின்ற
இளவட்டங்களும்..
கூச்சம் நீக்கி மேடையேறிய
உள்ளங்களும்...
ஒரு பொழுதும் அகலாது
என் இதயம் விட்டு..

நாட்களின் நீளங்கள்
நாமே அறியாமல்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து குறைந்தே போனது...

இன்று விழிக்கையில்
கடைசி நாள் என்னும் சோகம்
தவழ்கிறது என் இதய
பரண்களில்...

நால்வர் என வந்து
நாற்பதோடு திரும்புகிறேன்..

வாழ்க்கை வட்டத்தின் சுற்றுகளில்
எங்கேனும் ஓர் புள்ளியில்
யாரேனும் நான் மீண்டும்
சந்திக்க கூடும்..

பயணங்களின் நினைவுகளை
அசை போட போகும்
அந்த நொடிகளுக்காக
நானும் காத்திருக்கிறேன்..

அதன் மட்டும் நினைவுகள்
தாங்கி இருக்கிறேன்..

புது உறவுகளுக்கு நன்றி!
என் வாழ்வின் புது வரவுகளுக்கு நன்றி..!

வசீகர குரல் கொண்ட ஆர்டிக்கு நன்றி..
எப்பொழுதும் சிரிப்பு பூ நீட்டிடும்
தேரோட்டி பெர்ரிக்கு நன்றி..

பயணங்கள் முடிவதில்லை
மீண்டும் சந்திப்போம்
ஓர் இனிய பயணங்களில்..

---EURO TRIP

Wednesday 24 August 2016

அடைமழை..!



அடைமழை பெய்து முடிந்து
அந்தி சாயும் பொழுதென
என் வீடு

ஆட்கள் அற்று போன
என் வீதியெங்கும்
மழை நீர் மட்டும்
தேங்கியிருக்க...

நிஜ வானமும்
மழை நீரில் மிதக்கும்
வானத்து பிம்பமும்

நிலவு அற்று போன
என்
ரெட்டை வானங்களும்
வெறிச்சோடிய
மேகங்களோடு..!

அடை மழை ஓய்ந்த
அறிகுறியாய்

வீட்டு முற்றத்தில்
சேர்த்த மிச்ச
மழை நீரை
துளியென நான்
உதிர்கின்ற நேரம்..!

மற்றுமொரு
அடைமழை  தனை
என் வீட்டு கூரை தாங்காதே
உயிர் கூடு உறங்காதே..

போதும் இந்த
அடைமழைகள்..!
இனிமேல் எனக்கு
தனியென வாட்டும்
கோடையே போதுமே!!
மழை வாடை கூட வேண்டாமே!

Thursday 18 August 2016

கனவு வாழ்க்கை!!


உரிமை எடுத்துக்கொள்ள 
கோரி
நீ நடத்திய கோரிக்கை
போராட்டங்களும் 

கோபங்கள் கொள்ள 
சொல்லி உன் 
கொஞ்சும் கெஞ்சல்களும்

நான் உனது என்னும்
வாஞ்சையில் 
உன் வசமாகி
போன நானும்!

நெஞ்சோடு இன்றும்
தென்றல் காற்றென வீசும்..!
நீ அற்று போன வெற்றிடங்கள்
தேடி நிரப்பும்!

உரிமை மீறல்கள்
என் நடவடிக்கைகள் 
என்னும்
உன்னின் உதாசீனங்கள் கண்டு 
என் நிலை நானும் உணர்ந்து
கொஞ்சம் நகர்ந்தே கொண்டேன்!

கண்ணோரத்து ஈரங்களும்
நெஞ்சோரத்து இரக்கங்களும்
கருவிழியின் கடைசி 
கண்ணீரில்
கரைந்தே போனது!

என் வாழ்க்கை வழித்தடங்களின்
வலி அறிந்தவள் நீ!
அறிந்தும்
மீண்டும் சோகங்கள்
கொணர்ந்தாயே!!

ஊருக்கு என்று பேருக்கு 
ஒட்டி வைத்த
ஒற்றை புன்னகையும்
ஒடுக்கப்பட்டது!!

வீரியங்கள் அற்று போன
உன் வார்த்தை
விதைகளில்
என் விருட்ச கனவு
கலைந்தே போனது!

விவரம் அறியாமல்
நான் நம்பியிருக்க கூடும்
உன்னோடு சேர்த்து
உன் வார்த்தைகளையும்..

இனி கனவுகளின்
வாழ்க்கைகளை
உன் வார்த்தைகளில்
விவரிக்காதே!

நிழல்கள் என் கால்களுக்கு
இதமும் இடமும் தரலாம்!
நிஜங்கள் மட்டுமே என்
கால்களுக்கு
நிரந்தரம் தரும்!

நின் நிஜங்களோடு
நான் என் நிரந்தரம் 
அறிகிறேன்!