Thursday 20 April 2017

இளைப்பாறும் நிழல்..!!

ஒவ்வொரு அணுவோடும்
வெற்றிடம் தேடி தேடி
நிதம் நிரப்பிய
உன் நினைவுகள்..!

செயலிழந்து போன
என் செயலிகள்
புத்துயிர் பெற்ற நாள்
நீ அறிவாய்..!

திரை கடல்
ஓடி திரவியம் தேடு..!
ஊர் அறிந்த கூற்று..!

உணர்ந்தறிகிறேன்..!
செயலியின் திரையில்
தவற விட்ட திரவியம்
காண்கிறேன்..!
கண்களின் வழியே
திரவம் வழிய காண்கிறோம்..!

மிச்சங்களின் உச்சமோ
உச்சங்களின் எச்சமோ
எச்சங்களின் மிச்சமோ..

எதுவாகி போனோம்
நாம் இன்று..?

பகிர்ந்திட முடியா
ஒன்றொன்று..!
நிம்மதி பயிர்க்குமென
நானே புறம்தாண்டி
வந்த தருணம்..!

தோன்றிடும் உள்ளெண்ணம்
பகிர்ந்திட முடியா
உறவாகவே
இன்றோடும் தொடர்கிறோம்..!

தூக்கம் தாங்கிய தோள்கள்
துக்கம் ஏந்திய விரல்கள்
யாவும் தொலைத்த
வன்கொடுமைகள் தாண்டி

வரும் பொழுதுகள்
எவையும் தவறவிட
திராணியற்று
இளைப்பாறும் நிழலென
தோள்  வேண்டி
தொடர்கிறோம்...!

சாத்திய கூறுகள்..!!

நொடிகளில் சிதறிடுமோ..?
சிதை எரிகையிலும்
அணைந்திடாது..!
நின் நினைவும்
நம் காதலும்..!

யாதொரு நெருடலின்றி
முழுமனதோடு தோல்வி
ஏற்கிறேன்..!

நின் காதல் -
என்னினை விட
மிக சுத்தம்..!

தனக்கென கொஞ்சமென
ஏதும் வைத்திராது
மொத்தமென என் மீது
காதல் பொழிந்தவள்..!

சாத்திய கூறுகள்
கண்டிடும் ஆராய்ச்சி
இது மட்டிலும் முடியவில்லை..!

துளியும் சந்தேகமின்றி
சத்தியமென
என் வார்த்தைகள்
என் பாதைகள்
நம்பியவள் நீ..!

நின் காதலும்..
நீயும்...
என்னினை விட
மிக சுத்தம்..!

தேகம் சேராது போயின்
நின் நினைவு அகன்றிடுமா..?

உன்னின் சிநேகம் போதும்
இவ்வாழ்வு வாழ்ந்திட..!

காதல் வீணை..!


உன் எத்துப்பல்லின் அழகில்
ஒளிர்ந்த வெளிச்சம்
அறியாமல் திரிந்தேனோ..?

முயல் என்று உன்னை
சில நேரங்களில்
சொல்லி சிரித்ததுண்டு...!

கயல் என்று காதலோடு
உன் கண்ணை
வர்ணித்ததுண்டு..!

அப்பொன்றும் இப்பொன்றும்
அல்லாமல் எப்போதும்
என் துணை வேண்டி
தேடி  இருந்தவள் நீ..!

நல்யோகம் வாய்க்க பெற்றும்
யோகி போல நான் இருக்க
துரோகி நான் தானே ஆவேன்..!
நீ ஏன் அழுகிறாய்..?

தொலைத்தவன் நான் தானே
காதலையும்
உன்னையும்...!

ஏதோ ஏழரை பிடித்தவன்
போலவே கடக்கின்றேன்
எல்லா நாளையும்..!

நீ இன்றி போன இங்கே
நான் எங்கு போனாலும்
நீயே..!

யார் வந்து
மீட்டு தருவார் உன்னை..?
மீண்டும் காதல்
வீணை வாசிக்க..?