Friday 11 August 2017

(தீ)ர்ப்பொன்று கொண்டு..!





தூரமாக்கி துன்புறுத்துகிறாய்..!
நேரம் தாழ்த்தி காயம் செய்கிறாய் ..!

தினசரி முடிகையில்
இதனின் முடிவு
வேண்டுகிறேன்..!
குறுந்தகவல் எதிர்நோக்குகிறேன்..!

தொலைத்தவை கண்ட..
தொலைத்த பாவை கண்ட..
என் மனம்
வார்ப்பென உனை கண்டிட..!

வஞ்சங்கள் எங்கேனும் கண்டாயோ..
கொண்டதாய் எண்ணினால்
இக்கணம் பிரிகிறேன்..!

முழுமை அறிந்து
இவ்வாளுமை செய்வாயின்
தலைதாழ்த்தி
ஏற்றிடுவேன்..!

அறியாப்பிழை ஒன்று
என்று நானறிவேன்..!
உள்ளர்த்தம் அறிந்திடுவாய்
என்றெண்ணிய எண்ணம்
என்னைமட்டிலும் தவறு..!

மிச்சவை தரும் கோவம்
எங்கனம் சிவக்கும்..!
உன் சிரிப்பின் சிவப்பை விட..!

அறிந்திட முயல்வாய்
என்றெண்ணி -
காலம் தாழ்த்தி..
நேரம் கடத்தி..
இவ்வுறவு முடித்திட
விருப்பமில்லை..!
விரும்பவுமில்லை..!
அறிவாய் நீ இதை என அறிவேன்..!

வேண்டிய வாய்ப்புகள்
நிராகரிக்கப்பட...
வார்த்தைகளற்று
நிர்கதி ஆனேன்..!
நீ இன்றி நிர்மூலம்
ஆகிறேன்..!

உறவின் நீள அகலம்
அழகாய் நீ
அளந்த நிமிடம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நான் சிதறி போனேன்..!

என் சிதறல்கள் கண்டும்
காணாதது போலவே
கதைக்கின்றாய்...
மெல்ல மெல்லமாய்
என்னை வதைக்கின்றாய்..!

வார்ப்பென எண்ணி வாழ்ந்தேன்
தீர்ப்பொன்று கொண்டு
உறவு தீர்த்தாயே..!

தூரமாக்கி துன்புறுத்துகிறாய்..!
நேரம் தாழ்த்தி காயம் செய்கிறாய் ..!
கோபத்தின் உச்சத்தில்
உறவு தொலைக்கிறாய்..!

வாழ்வில் தொலைகிறோம்..!
நன்றிகள் பல..!
என்றும் நட்புடன்..!

Thursday 20 April 2017

இளைப்பாறும் நிழல்..!!

ஒவ்வொரு அணுவோடும்
வெற்றிடம் தேடி தேடி
நிதம் நிரப்பிய
உன் நினைவுகள்..!

செயலிழந்து போன
என் செயலிகள்
புத்துயிர் பெற்ற நாள்
நீ அறிவாய்..!

திரை கடல்
ஓடி திரவியம் தேடு..!
ஊர் அறிந்த கூற்று..!

உணர்ந்தறிகிறேன்..!
செயலியின் திரையில்
தவற விட்ட திரவியம்
காண்கிறேன்..!
கண்களின் வழியே
திரவம் வழிய காண்கிறோம்..!

மிச்சங்களின் உச்சமோ
உச்சங்களின் எச்சமோ
எச்சங்களின் மிச்சமோ..

எதுவாகி போனோம்
நாம் இன்று..?

பகிர்ந்திட முடியா
ஒன்றொன்று..!
நிம்மதி பயிர்க்குமென
நானே புறம்தாண்டி
வந்த தருணம்..!

தோன்றிடும் உள்ளெண்ணம்
பகிர்ந்திட முடியா
உறவாகவே
இன்றோடும் தொடர்கிறோம்..!

தூக்கம் தாங்கிய தோள்கள்
துக்கம் ஏந்திய விரல்கள்
யாவும் தொலைத்த
வன்கொடுமைகள் தாண்டி

வரும் பொழுதுகள்
எவையும் தவறவிட
திராணியற்று
இளைப்பாறும் நிழலென
தோள்  வேண்டி
தொடர்கிறோம்...!

சாத்திய கூறுகள்..!!

நொடிகளில் சிதறிடுமோ..?
சிதை எரிகையிலும்
அணைந்திடாது..!
நின் நினைவும்
நம் காதலும்..!

யாதொரு நெருடலின்றி
முழுமனதோடு தோல்வி
ஏற்கிறேன்..!

நின் காதல் -
என்னினை விட
மிக சுத்தம்..!

தனக்கென கொஞ்சமென
ஏதும் வைத்திராது
மொத்தமென என் மீது
காதல் பொழிந்தவள்..!

சாத்திய கூறுகள்
கண்டிடும் ஆராய்ச்சி
இது மட்டிலும் முடியவில்லை..!

துளியும் சந்தேகமின்றி
சத்தியமென
என் வார்த்தைகள்
என் பாதைகள்
நம்பியவள் நீ..!

நின் காதலும்..
நீயும்...
என்னினை விட
மிக சுத்தம்..!

தேகம் சேராது போயின்
நின் நினைவு அகன்றிடுமா..?

உன்னின் சிநேகம் போதும்
இவ்வாழ்வு வாழ்ந்திட..!

காதல் வீணை..!


உன் எத்துப்பல்லின் அழகில்
ஒளிர்ந்த வெளிச்சம்
அறியாமல் திரிந்தேனோ..?

முயல் என்று உன்னை
சில நேரங்களில்
சொல்லி சிரித்ததுண்டு...!

கயல் என்று காதலோடு
உன் கண்ணை
வர்ணித்ததுண்டு..!

அப்பொன்றும் இப்பொன்றும்
அல்லாமல் எப்போதும்
என் துணை வேண்டி
தேடி  இருந்தவள் நீ..!

நல்யோகம் வாய்க்க பெற்றும்
யோகி போல நான் இருக்க
துரோகி நான் தானே ஆவேன்..!
நீ ஏன் அழுகிறாய்..?

தொலைத்தவன் நான் தானே
காதலையும்
உன்னையும்...!

ஏதோ ஏழரை பிடித்தவன்
போலவே கடக்கின்றேன்
எல்லா நாளையும்..!

நீ இன்றி போன இங்கே
நான் எங்கு போனாலும்
நீயே..!

யார் வந்து
மீட்டு தருவார் உன்னை..?
மீண்டும் காதல்
வீணை வாசிக்க..?

Thursday 23 March 2017

இந்நாள் கடந்திருப்பேன்..!


யாவும் யாரோ ஆகிவிட
நான் யாராகி போனேன்
இன்று..?

சில நேரங்களில்
சொல்ல முடியா
தனிமை சோகங்களில்
விரக்தி சிரிப்பு
உதடுகளில் தவழும்..!

உன் பொருட்டு வேண்டி
பார்த்திட கூடாது
என்றுஒதுங்கி
ஊர் தாண்டி
உறவு தாண்டி
பறந்தொரு பயணம் போனவன்..!

பார்த்தால் என்னாவேன்
என்பதை தாண்டி..
என்னாவாய் நீ
என்றெண்ணிய எண்ணம்
மறந்திருக்க வாய்ப்பில்லை
நீயும் நானும்...!

அந்நிகழ்வு முடிந்து
ஓராண்டாகி போன
தருணத்தில்..

பயந்து ஒதுங்கிய
நிஜத்தின் நிழற்படம்
கண்முன் தீட்டுகிறாய்
கவலை மீட்டுகிறாய்
கண்ணீர் ஏற்றுகிறாய்
நினைவுகள் நீட்டுகிறாய்...!

நிகழும் நிஜ
காதல் காட்டுகிறாய்..!
ஜோடியாய் ஒன்றிணைந்த
அத்தனை படங்கள்
யாவும் ஓன்றிணைத்து
யாவும் நீ
என்ற
வாசகம் வடிக்கிறாய்..!
வாழ்க்கை யாசகம்
கூச்சலிடும் நான்..!

புகைப்படம் பார்த்த வேளையில்
நிமிடம் நகர மறுக்கிறது
ஒரு கணம்...!
யாவும் கனவோ..?
என்றெண்ணும்
மேதை தான்
இன்னமும் நான்..!

தேவை என்னென்று
புரியாத நான்..!
புரிந்த பொழுது
பாவை தேவையில்
நான் இல்லை..!

சாயம் போகுமோ காதலும்..?
மாயம் ஆகுமோ நின்
நினைவுகளும்..!
மறைத்தே போனாயோ..?
மறந்தே போனாயோ..?

என்னானேன் நான்..?
என்னாவேன் நான்..?
சிறு சிந்தனை - உன்
சிந்தையில் கொண்டிருந்தாய்
ஆயின் - இந்நாள்
கடந்திருப்பேன் -இன்னல்களற்று..!

அன்றொரு நாள்
ஏதோ ஒரு ஊரில்
யாரும் அறிந்திடா
இடம் தனில்
தனிமையில்
அழுது அழுதே
கடந்த என் அன் இந்நாள்..!

இன்று நீயும் நானும்
ஒன்றென இருந்திட்ட
என் அறையில்
மீண்டும் தனிமையில்
அழுது கடக்கிறேன்..!

ஒவ்வொரு வருடமும்
வந்தாக போகும் இந்நாள்...!
அழுகைக்கெனவே நான்
ஒதுக்கி வைத்துள்ள
உன் நன் நாள்..!
வாழ்க வளமுடன்...!

தூது செல்லும் மேகமே..!

வானம்  தழுவும் மேகமே..
தழுவியபடியே நழுவி நழுவி..
மெல்ல மெல்ல நகர்ந்தேறி
நீயும் ஓர்  நாள் சென்றிடுவாய்..!

உலகம் வியந்து
செல்ல நினைத்திடும்
அப்பிரபஞ்ச காண்டம்...!

உலா வரும் நிலவே
ஓர் நாள் நீயும் உறங்கிடு..!
இல்லை மெதுவாய்
மேகத்தின் பின்
சென்று மறைந்திடு..!

ஓ சூரியனே..!
உனக்கும் இவ்விதி
பொருந்தும் என்றுணர்ந்திடு...!

ஒருங்கிணைத்த
சோகம் சேர்த்து
கருமை தீட்டிய
கார்மேக முகம் கொண்டிடு..!

ஊர் சேர்த்து
தேர் இழுப்பார்
திருவிழாவில்...!

ஊருக்கே தேர் இழுத்த
எந்தன்
ஒற்றை தோள்
அறிவால் அவள்..!

ஊரே நனைந்திடும் படி..
ஊரே நினைத்திடும் படி..
ஓர் பெருமழை பொழி..!

மறவாது கூறிடு..!
செங்குத்தென பாயும்
துளிகளிடம்...
இம்மழையின் செயலும்
அத்துளியின் சேவையும்..!

நேரென அவள்
நெற்றிப்பொட்டில் விழுந்து
மெல்லமாய் உருண்டோடி
நெஞ்சாங்கூட்டில் இறங்கிடு..!

விஷமென தேக்கி
வைத்திருக்கும் - அவளின்
இயலாமை கரைத்திடு..!

அவளை உலுக்கி உலுக்கி..
அவளை உலுக்கி உலுக்கி...
நீ எத்தருணத்திலும்
தவறில்லை என்றுரைத்திடு..!

வருத்தங்களே ஆயினும்
அழுத்திடட்டும் அந்நாள்
அவளும்..!
அவள் அழுகை ஓயும்
வரை...
ஒரு கணம் கூட
நீயும் ஓய்ந்திடாதே..!

அவளின் வீணற்ற
குற்றஉணர்ச்சிகள்
மடியும் முன்
நீ முடியாதே..!

நீரோடு நீராக
சோகம் கலக்கட்டும்..!
இனிமேல்
அவள் வாழ்வு களைகட்டும்..!

அவள் காதுகளில் வடிகின்ற
துளிகளிடம் கோரிடு..!

காலச்சக்கரம் சுற்றிய
கலாச்சார
திசையில் மாறித்தான்
போனோம் நாமும்..!
நிச்சயம் பிழை
உன் மீதில்லை..!

அவள் பால் என் காதல்
சுத்தம் என்று
மழை சத்தம் தாண்டி
கூறிடு..!

இதை மட்டும்
என் சேதியாய்
தகவல் தந்திடும்படி...!

உன்னின் துளி போல
அத்தனை சுத்தமானவள்..!

அழுதோய்ந்த அவள்
முகம்தனை உன் நீர்
கொண்டு கழுவிடு..!

அவளின்..
இயலாமை,சோகம்,
அழுகை,
காதல்,அன்பு,
என யாவும் கண்டு
நானே கேட்டிடாத
ஒரு செயல் நீயும் செய்வாய்..!!

உலகம் கண்டிராத ஓர் நிகழ்வு...!
உலகம வியக்கும்
தினமனவே அந்நாள் மாறும்..!

இக்காதல் கண்டு
நீயும் கலங்கி...
சரியனவே
ஒற்றை புள்ளியில்
ஒரே நேரத்தில்
உலகின் அனைத்திலும்
ஓர் பெருமழை பொழிவாய்..!
சரித்திரம் படைப்பாய்..!

முடிக்கையில் நீயே கூறிடுவாய்..!
நாங்கள் இணைந்திருக்க
வேண்டிய
துணைகள் என்று..

தூது செல்லும் மேகமே..!
போதும் உன் சேவை...!
தூறல்களில்
தூரங்கள் குறைத்தாய்..!
மனக்குறை தீர்த்தாய்..!
என் இதயம் குளிர்ந்தது..!

Tuesday 21 February 2017

நின் அகம் புறம் அறிந்திடாமல்...!



பழிச்சொல் சாமரம்
வீசியதில்லை
எந்நிலையிலும் நானறிந்து..!

ஏனெனில்..
உன் வாஞ்சைகளில்
வஞ்சங்கள் கண்டதில்லை...!

சுய சுற்றம் கொண்ட
பாச நலத்தின்
விலை என்னுயிராகி
போய்விடின் என்றுணர்ந்தின்
நிஜம் மாறியிருக்குமோ...?

தொடர்ந்திடும்
நித்திரை நினைவுகள்
தொலைத்திட்ட உறவுகள்
நித்தம் என் மடிமீது
நித்திரை வார்த்திருக்கும்...!

எந்நிலையிலும்
பழிச்சொல் சாமரம்
வீசிடமாட்டேன்...!

வார்த்தைகளை
வருத்தங்களின் வடிகால்
என கொண்டு...!
நினைவுகளில் சமரசம்
பூண்டு..!
தன்னிறைவு கொண்டு..!

இலக்கண பிழை
தான் ஆயினும்
மீளப்பெற்றிட முடியா
பிழையாகி...!
பிழை கொண்ட வாழ்வே
வாழ்வோம்...!

மிகையென தோன்றினும்...
எதிரிலே எனை நீ காணினும்..!
எதிரியாய் எனை நீ காணினும்...!

யாதுமாகி நீயும் நின்
நினைவும் தொடர்ந்திட...
இருள் நிழலென
தொடர்ந்திடுவேன் - நின்
அகமும் புறமும்
அறிந்திடாமல்...!

Monday 20 February 2017

நாள் காட்டி...!


நீ இன்றி
என் நாள் காட்டி
நகர்ந்திடாது..!

வார்த்தைகள் அசீரிரியாய்
என் செவிகளோடு
இப்பொழுதிலும்..!

நாளும் கடந்து
வருஷம் கூட
முடிஞ்சுருச்சு..!

உறவுகள் மாறுகையில்
உண்மைகள் உதிர்ந்திடுமோ..!
உதிர்த்த வார்த்தைகள்
உதடுகளில் உறைந்திடுமோ..!

ஊமையாகி போனதோ
உன் வார்த்தைகளும்
என் வாழ்க்கையும்..!

பிரியும் நாள்மட்டிலும்
புரியவைத்திட முயன்ற
நடைமுறை விளக்கம்
நிஜங்களாய் காணுகையில்
புரிந்திருக்கும் என நம்புகிறேன்..!

வாய்த்திருந்த வாய்ப்புகள்
தவறவிட்ட தருணங்கள்
பாதை தவறிய இரு பாதங்கள்..!
வாழ்க்கை  தவறிய இரு மனங்கள்..!

சொற்ப நிமிடங்களில்
முடிந்து போயிட
இஃது அஃதில்லவே...!

உந்தன்
அன்போடும்
அணைப்போடும்
அரவணைப்போடும்
நான் கண்ட
ஆத்மீக நெருக்கம்...!

கொண்ட என் காதல்..
இன்னுமொரு காதல்
எங்கேனும் வந்தினும்
உன் இணைப்பெறாது..!
உன்போல்
ஓர் துணைப்பெறாது..!

நித்தம்...
கொல்லும் தனிமை..!!
சொல்லும் உன் அருமை..!

ஓர் நல்ல புத்தகத்தின்
கடைசி பக்கம்
படிக்க முடியாமல்
கனமான மனதோடு
விட்டு பிரிந்தேன்..!

ஓர் நல்ல கதை சொல்லி
நானே ஓர்
நன் முடிவோடு
செல்கிறேன்!

Thursday 16 February 2017

வெண்ணிற இரவுகள் ..!



ஒப்புக் கொள்வதில்
ஐயம் ஏதுமில்லை..!

ஏதுமில்லா என்னிடத்தில்..
ஐயம் இருந்திட
வாய்ப்பில்லை
என நன்கு நீ அறிவாய்..!

சந்தித்திடாத ஓர் சந்தர்ப்பம்..!
ஆதலின் சிறு தயக்கம்
என்னோடு..!

முன்னின்று எதிர் கொள்ளவா..?
காலம் கடத்தி
நேரம் தாழ்த்தி
அதனின் போக்கில்
சென்றிடவா..?

கேள்வி கணைகள்
தனிமையில் எனில்
என் தயக்கங்கள்
தவிர்த்திருவேனோ..?

மேற்கோள் கொண்டிராத
பொருள் தேடிடாத
நீட்சியற்ற ஆசைகள்..!
எதனின் பொருட்டு
ஆசைகள் நிறுக்கப்படும்..!

நேர்மை நேர்கோடுகள்..!
வரைமுறைகள் தாண்டாத
வார்த்தைகள்..!
எதனின் கொண்டு
மனிதம் நிர்ணயிக்கப்படும்..!
 
எதனின் எதனால்
ஆராயும் பொருட்டு
விடை தேடிடும்
வினாக்கள் இல்லை..!

அடை தேடி
அலைந்திடும்
பறவை நான்..!

இதனின் இதன்பால்
என்றின்றி
புரிதலின் பயன் பால்
மீட்டிடணும் உறவு..!

சில சமயங்களில்..
ஊருக்கென சிரித்தாலும்
கண்ணீர் வரும் நினைவுகள்..!

சில சமயங்களில்
உறங்கவே நினைத்தாலும்
கண்ணீர் தரும் கனவுகள்
மீட்டிடும் - சில
வெண்ணிற இரவுகள் ..!

Tuesday 14 February 2017

எவ்விடமும் கானகமே..!


கானகத்தின் வனப்பினிலே
இருளின் கணத்தினிலே..
காட்டொளி கண்டும்
காணாது போனேனே..!

காட்டருவி காணக்கண்டும்
கானல் நீரின்
ஓட்டத்தினில் கண்கொண்டு
பின் சென்று
கவிழ்ந்தேனே...!

அரியாசனம் துறந்தன்று
துணையும் உடன்கொண்டு
தமையனின் துணைகொண்டு
வனம் வசம்
சென்ற ஓர் வனவாசம்
உலகறியும்..!

காதல் அரியாசனம்
இழந்தன்று
பிரிந்த துணையின்
நினைவில் பிணிப்பறவையென
துணை யாரும் அற்று
வனம் சென்ற நிஜம்
என் உலகறியும்..!

இகழ்ச்சிகள் இடையில்
அஃதொன்று
அடைப்பொன்று அடித்தொண்டையில்..!

உமிழ்ந்தெடுத்து விட முடியா
உயிர் நீர் உணர்ந்தே
உரிமைகள் உதறிந்த
பயணம்..!

தொலைத்த சீதையின்
நினைவுகள் தொலைக்க
நின் பயணம்..!

தூரங்களில்
நீள் கயிறென நீளும்
நம் நினைவுகள்..!

சீதை தொலைத்த
இப்பேதை பயணம்..!!
தமையன்கள் கிடைத்தும்
கிடைத்திடா அச்சீதை..!

காதல் அரியாசனம்
இழந்தன்று தொடங்கி...
பன்னிரெண்டு
திங்கள் தனிவாசம்
முடித்து திரும்புகிறேன்..!

பொதுவென இருக்கும்
ஆசைகள் ஏக்கங்கள்
என்னோடும்..!

தொலைத்த
தாய்மடி வாசம்..!
தோழனின் சிநேகம்..!
உறவுகளின் நேசம்..!

சிறு மழை...!
மண் வாசம் உணர்ந்து..
நுகர்ந்திடும் நாசி..!
சுடு தேனீர் வேண்டி...
ருசித்திடும் இதழ்கள்..!

இவ்வாறே
சில நூறு
சின்ன சின்ன ஆசைகள்..!

இத்தனையும் தாண்டி
சற்றும் குறைவின்றி
நம் காதல் நினைவுகள்..!

வாழ்க்கை வழி தவறிய..
உன் வாழ்க்கை வழியில் தவறிய..
எம்பாதங்களுக்கு எவ்விடமும்
ஆக பெரும் கானகமே..!

எங்கெங்கு நான் போயினும்
நீ அற்று போன
எவ்விடமும் கானகமே..!

Monday 6 February 2017

வாழ்நாள் சிறந்த தூக்கம்..!


சில நாட்களின்
சிறு சிறு நிகழ்வுகள்..
மகிழ்ந்துணர்ந்த தருணங்கள்..
பெரும்பதிவென
நெஞ்சில் பதியும்..!

காலச்சுழற்சியில்
நாட்கள் நகர்ந்திட..
பதியம் போட்ட செடியன
மறவாத நிகழ்வுகள்..
மறையாத காட்சிகள்..
மரமாகி காண்போம்..!

அவ்வண்ணமே
கடந்து போன ஓர் நிகழ்வு..!
இன்று நிஜமென -
கண்முன்னே  வந்து
கண்சிமிட்டியது..!!
கண் இருட்டியது..!

ஸ்தம்பித்து போன
சில நிமிடங்கள்
கடந்து
மீண்டு வரலானேன்!!

மகிழ்வென கடந்த
அந்நாளின் நினைவலைகள்
அமிழ்ந்து அமிழ்ந்து
என் நெஞ்சோடு எழுகிறது
கடல் அலைகள் என..!

கலங்கிய பார்வை
மேல்நோக்கி
உயர்ந்த புருவங்கள்..!
சிறு பிழையும் அற்று
காட்சி கண்ணில் விரிகிறது..!

ஓர் வார இறுதியின்
விடுமுறை தினத்தின்
உதயத்தில் சந்திக்கிறோம்..!

கையிருப்பின் கடைசி
சில்லறை காசு
எண்ணி எண்ணி
செலவிடுதல் போல..!

நம்முடைய காதலின்
கடைசி வார இறுதியை
துளி துளியென
கொண்டாட தொடங்குகிறோம்..!

பிள்ளையார் சுழி போட்டு
துவங்குகிறோம்..!
விநாயகர் கோவில்
வாசலில்...

மனமுருகிய வேண்டுதல்கள்
கேட்டும் உருகிடாத
முதற் கடவுளே...!

பிரிகிறோம் என்றுணர்ந்தும்
உன்னோடே பிரிவை
தொடக்குகிறோம்..!

இருவர் பிரிவிலும்
இருவர் தனி தனியாய்
ஒருவராயினும்..
இருவரோடும் இணைந்தே
இருக்க வேண்டி
உன்னோடே பிரியமாய்
பிரிகிறோம்.!!!

உன்னோடு கழித்த
எத்தனை தினசரிகள்..!
கடைசி தினசரியின்
கணங்கள் தான்
எவ்வளவு கடுமையானவை!!
எவ்வளவு கொடுமையானவை..!!

இவ்வளவு எளிதில்
ஓர் நாள் கடந்திடுமோ..?
இத்தனை நாள் வாழ்வின்
மிக சிறிய நாளாய்
தானாய் புகுத்திக்கொண்டது
என் நாட்குறிப்பில்..!

அந்தி மெல்ல மெல்ல
மேற்கில் வானோடு
தழுவிடும் காலம் அது..!

உன்னை வீடு கொண்டு சேர்க்கும்
பொறுப்பின் காரணம்
கொண்டு பயணிக்கிறேன்..!

அப்போதேனும் அகவியிருக்கலாம்
உன்னோடே என்னை கொண்டு
சென்று விடு என..!

அரசனின் கட்டளை
வேண்டி காத்திருக்கும்
படை தளபதியின்
வாளினை போல்...

உன் வார்த்தைகளுக்காக
காத்திருந்தன
என் இமை வாள்கள்..!

சிறகுகள் அற்ற
வெள்ளை தேவதை என
வந்தாய் என் வாழ்வில் நீ..!

சிறகுகள் கட்டி
பிரித்து செல்கிறது
காலம் இன்று...!

கலைந்து போன காற்றில்
கலந்து போனவை...
கடந்த அன்றைய நிஜங்கள்...
கண்ணில் கண்ணீரோடு
பயணிக்கிறோம்!!

வாழ்நாள் பெரிய
சிறந்த தூக்கம்
என் தோள்களில்
நீ கொண்டாய்!

உறங்கும் உன் பிம்பம்
காண கண்டேன்..
கண்ணாடியில்..!

மங்கிய  நீல நிற
இரவின் வெளிச்சத்தில்
கண்ணயர்ந்து உறங்கும்
சிணுங்கல் முகம்
கண்டு மயங்குகிறேன்..!

உறக்கத்தின் மயக்கம்
தெளிந்திடா வண்ணம்
ஓர் மிதவேக பயணம்!

உந்தன் உறக்கத்திலே...
உறங்கும் உன் முகம் கண்டே...
கடைசி மணித்துளிகள்
கழிக்கிறேன் நான்..!
பத்திரமாய் வந்து
சேர்க்கிறேன்..!

உறக்கம் முடித்து
தெளிந்த உறக்கத்தில்
அழுகை தொடங்குகிறாய்..!
விரயமென தவறவிட்ட
சில மணித்துளிகளுக்காக!

தவறவிட போகும்
மிச்ச வாழ்வின்
யாசகம் வேண்டி நான்..!

தோற்று போன
நாமும்,
நம்மின் சமாதானங்களும்..!

ஸ்தம்பித்து போன
சில நிமிடங்கள்
கடந்து
மீண்டு வரலானோம்!!

உண்மை உணர்ந்து
அழுகையில் பிரிகிறோம்..!
இரு வேறு
திசை ஆகிறோம்...!
இருவரும்..!

Friday 27 January 2017

சிறைச்சாலை கம்பிகள்..!


சதுரங்க ஆட்டத்தின்
சாதுர்ய வாய்மொழி கேட்டு
சாமர்த்தியம் கெட்டு..!

சிப்பாய் நானோ...
கையூட்டு மட்டுமின்றி
வாயூட்டு பூட்டோடும்...!

அடிகள் முன்னெடுத்து
வைக்கிறேன்- விழப்போகும்
அடிகள் அறியாமல்..!

தனியொரு சிப்பாய் என
கடைசி கட்டம்
நோக்கி நகர்த்துகிறாய்..
ராணியை மீட்டெடுக்க..!

சகுனி நீயோ...?
தருமன் நானோ..?
பகடை உருட்டினாய்
பாடையில் ஏற்றினாய்..!

சக்கரவியூகம் கொண்டு
போற்றி தேற்றி
நாண் ஏற்றிய
வில்லேற்றி அனுப்புகிறாய்..!

வகுத்த வியூகங்கள்...
வளைத்த வில்லோடு
சென்ற அம்புகள்  யாவும்
வில்லாளினியிடம் வீணற்று
ஆகிட-  கழு ஏற்றிடுவாய்
என்று எக்கணம் நீ அறிவாய்..!

பாதங்களில் பூக்கள் படர..
பாதைகளில் பூக்கள் தூவினாய்..!
பாடைகளில் விழுமென,
பாடை தூக்கியின்
பாதம் விழுமென...
எங்கனம் நீ அறிவாய்..!

சிறைச்சாலை கம்பிகள்
விடுதலை அறியாது..!

கல்லறை செல்லும்
பூக்களின் வாசம்
நுகரப்படாது..!

யாரும் நுகராமல்
வாசம் அறியாமல்
கல்லறை பூவென
ஆனேனோ..!!

Thursday 5 January 2017

காதல் கரகாட்டம் ..!



ஏன் தோன போகுது?
என் துணை போகுது..!

கயித்து மேல ஏறி நின்னு
காதல் கரகாட்டம் ஆடுது..!

மதில் மேல் பூனையோ
தரையிறங்க மறுக்குது...!

நேரம் நெருங்க நெருங்க
நெஞ்சம் நொறுங்குது..!

மனசுக்குள்ள பூனை சத்தம்
பலவாறா கேக்குது..!

தொண்டை குழி அடைக்க..!
வழியற்று போன
வார்த்தைகள்
விழி பிதுங்கி நிற்க..!

பேச வேண்டிய
மொத்த வார்த்தைகளையும்
விழிகளோ கண்ணீர் திரள்களாய்
கொட்டி காட்டிட..!!

என் மௌனங்களையும்
சிரிப்புகளையும்
படித்துணர்ந்த உனக்கு
அழுகைகள் புரியலையா..!

அன்பிற்கு அழும்
என் அழுகைகள்
அறிந்திடவில்லையோ...!

தரை இறங்கிடா பூனை
தகராறு பண்ணுது..!
தனித்துவம் காட்டுது..!

மதில் மேல் பூனை
இன்று
மதி கெட்ட பூனையாய்..!

இதய மேடை...!


என் நாமம் கொள்வேன் நான்?
என் நாமம் கொண்டேன் நான்?

கதைகள் கதைத்திட
யாவும் பகிர்ந்திட
கதை சொல்லி நானோ?

நம்பிக்கை தந்திட
சொல்லி திருத்திட
தோழன் நானோ?

உணர்வுகள் புரிந்திட
உயிரென்று எண்ணிட
யார் நானோ?

இதய மேடையில்
காதலின் நிகராய்
எதை நிறுத்தினும்
துலாபாரம் தோற்றே
போக கண்டேன்..!

என் தன்மானமே தோற்க்கையில்
காதலும் எடை குறைந்து
தோற்க காண்கிறேன்..!

எள்ளி நகையாடிட
தள்ளி பகைமூடிட
யாசகங்கள் கேட்கும்முன்
யோசனைகள் நூறாயிரம்..!

ஏதேதோ இழந்த போதிலும்
தன்மானம் தொலைத்திடாத
என் தோள்கள்..!

தொலைத்திடாத தன்மானம்
வரட்டும் என்னோடு!!

தள்ளி இருத்தல் நல்லது..!
தன்மானம் கருத்தில்
கொண்டு
காதலை விட்டு
தள்ளி இருத்தல் நன்று..!

பன்னிரெண்டாம் வாய்ப்பாடு..!

அளவு கடந்து
தெளிவு மறக்கும் நிலையிலும்
கூட அரை வேக்காடு என
அலைந்தது கிடையாது
வார்த்தைகள் விழைந்தது
கிடையாது..!

பள்ளி பருவத்தில் பயின்ற
பன்னிரெண்டாம் வாய்ப்பாடு..!
அடிக்கடி நான் சொல்லி
நீ கேட்டது உண்டு..!

என்னின் தெளிவு
நிர்ணயிக்க - உன்னோடு
நான் ஒப்புவித்தது
உண்டு..!

குறுக்கெழுத்து போட்டியென
தொடர்ச்சிகள் இல்லாமல்
நடுவில் வினா தொடுத்து
சிறகடித்து சிரிப்பாய்..!

உன் சிரிப்பின் போதையில்
தெளிவு தொலைத்து
என்னை ஆசுவாசப்படுத்திக்
கொண்டு - இயல்பு நிலை
திரும்பி பதிலுரைப்பேன்..!

இடைப்பட்ட நேரங்களில்
உன் நக்கல்களில்
என்னை சின்னதாய்
சீண்டி பார்ப்பாய்..!

விடை கண்டு
அழகான ஆச்சர்யங்களில்
ஆளை மயக்குவாய்..!
மதுவின்
வீரியம் துறந்து
உணர்வேன்
உன்னின் வீரியம்..!

நம்மை விடுத்து
நம்மின் ஒருவர்
அறிந்த ரகசியம்..!

இன்று மட்டிலும்
யாரோடும்
பன்னிரெண்டாம் வாய்ப்பாடு
ஒப்புவித்ததில்லை..!

அரை பக்கம் கிழிந்த
பன்னிரெண்டாம்
வாய்ப்பாடு புத்தகமாய்...!
அரை பக்கம் கிழிந்த
வாழ்வோடு நான்..!