Wednesday 30 November 2016

உலகம் சுழலும்..! உன்னுள் சுழலும் உலகம்..!

கால சுழற்சியில்
ஏதேதோ மாற்றங்கள்
நம்முள்ளே..!

வாழ்க்கை நடைமுறையில்
நடையில்....
நரை பொங்கிடும்
என் தாடியிலும்..!

ஏதோ ஓர் அலுவலாய்
எங்கோ செல்கையில்...

நெரிசல் மிக்க
அந்த நாற்கரச்சாலையின்
போக்குவரத்து சமிக்கையில்
எதிர் உன்னை காண
நேர்கின்றது..!

பார்த்த கணம்
பிரமிப்பில் ஆழ்த்தி
மௌனிக்கச்செய்த காலம்..!
இத்தருணத்தில் நம்மை
இட்டது ஒரு கோலம்..!

உருமாறி நிறம்மாறி
மனம்மாறி
திசைமாறிய நாம்..!
இன்று..
காலங்களும் கோலங்களும்
மாறி..!

அத்தனைகால
திடகாத்திரத்தை  உடைத்து
என்கண்ணில்
பெருக்கெடுத்தது நீர்..!

அந்த நாற்கரச்சாலையில்...
பேருந்தின்
ஜன்னல் கம்பிகளில்
இடுக்குகளின் ஊடே...

நம் நான்கு கண்களும்
மௌன பாஷைகளை
பேசிக்கொள்கின்றன..!

மெல்ல மெல்ல நம்
ஆழ் நினைவுகள்
என்னை கொல்கின்றன..!

உன் வயிற்றின் வீக்கம்..
முகத்தில்
ஒளிரும் வெளிச்சம்..
காண்கையில் - நீ
தாய்மையின் அருகாமையில்
இருப்பதாய் சேதி
சொல்கின்றதே..!

நிஜம்தானோ....?

குழந்தேயென என் விரல்
பிடித்து சாலை கடந்தவள்
தானே நீ..!
எங்கு என் விரல் விடுத்தாய்..!

நானே உயிர்..
நானே உலகம்...
என்று சுற்றியவள்...!

இன்று உனக்குள்ளே ஓர்
உயிர் உலகம்
சுழலும் தருணத்தில்
காண்கிறேன்...!

இதோ!
சிவப்பில் இருந்து
மஞ்சளென மாற போகிறது..!

பச்சைவிளக்கு வருகையில்
மீண்டும் திசை
மாற போகும்
பயணம்..!

போய் வருகிறேன்..!
இல்லை போய் வா..!

இனி எங்கனம்
எப்பொழுது
காண்போம்
என அறியாமல்
விடை பெறுகிறோம்..!

கைப்பிடியளவேனும்
நம் காதல்
வைத்திருப்பாயா
உன் நெஞ்சோரத்தில்??

No comments:

Post a Comment