Tuesday 17 May 2016

முகவரிகள் தொலைத்த முகம்!


அந்தி வானோடு சூரியன் தழுவ
தேய்ந்த மாலை நேரமது
தழுவிய காதலோ கை நழுவ 
தோய்ந்த முகமது நமது!

வழக்கம் மீறிய வேகம் என்னோடு!
விரைந்து வருகிறேன்
யார் விழியோடும் விழாமல் 
உனை பார்க்கவே!
எங்கெனில் ரயில் நிலையம்!

எதற்கெனில் 
உன் திருமணதிற்கு 
உன்னை வழியனுப்ப!

சுவாசம் கேட்டு பதறும் இதயம் 
படபடக்கும் இமைகள் 
பரிதவிக்கும் மனசு
சிதறும் சிரிப்பு 
பிரியும் உயிர்
பலனற்று திரியும் நான்!

வார விடுமுறைகளை கூட 
பிரிவேன எண்ணி 
பெருந்துயர் கொண்டு 
கலங்கிய உன் கண்கள் அன்று!

போதும் என சொல்லும் அளவிற்கு 
கால அவகாசம் வாய்த்திருந்தும் 
தொலைநோக்கு பார்வையின்றி 
பாவை நீயும் 
பாவி நானும்!

இயல்புநிலை மறந்து 
குழப்பநிலை மனதோடு  
நாளைய நாட்கள் இன்றாக 
நாளடைவில் நானும் தான் 
பழகி போனேன்!

பழகிய காலங்கள் 
நெருங்கிய இரு மனங்கள்
பிரிவின் தொடக்கத்தில் இன்று!

நேற்றைய இரவில் 
நெரிசல் மிக்க சாலையில் 
பிரிவின் சோகம் சேர்த்து
ஓலமிட்டழுகிறாய் -என் தோள் சாய்ந்து!

சமாதானங்கள நான் கூற 
சம்மதங்கள் கேட்டு 
வினா தொடுக்கிறாய்!

நாவிழல் வந்து என் நா அடைக்க  
பொய்யாமொழி நானோ 
நம்பிக்கை சொல்லி 
உறுதிமொழி தருகிறேன் 
நம் இறுதி மொழி இது என 
தெரியாமல்!

கொஞ்சம் கெஞ்சி 
கொஞ்சம் கொஞ்சி 
தேற்றுகிறேன்!
கண்ணீர் துடைத்து  
ஓர் நீள நெற்றி முத்தம் இடுகிறேன்
முடிவில்!

சோகம் தாங்கிய சிரிப்போடு நீ
சிரிப்பின் முகமூடியோடு நான்!

உன் நெற்றியின் இளஞ்சூடு 
இன்றோடும் என் உதடுகளில்!
சற்று கண்ணாடி உற்று நோக்கி 
நீயும் தொட்டு பார்
இருக்கும் இன்றும் உன் நெற்றியோடு 
என் உதடுகளின் ஈரம்!

முன்னோக்கி நீ நகர 
வீட்டு வீதி வரை வந்து 
விட்டு திரும்புகிறேன்!

திரும்பி எனை பார்த்த 
உன் விழி பார்வை!
எக்கணம் கிடைக்கும் இனி!
நகராமல் நின்று விடு காலமே 
இக்கணம்!

கோமாளி நானோ 
ஏமாளி தானே எப்பொழுதும்!
என் சோக கீதத்திற்கு ஏற்ப 
தண்டவாளங்களோடு  
தாளமிட்டபடி நம்மை பிரிக்கும் 
உனக்கான ரயில்..

மூச்சிரைத்து நிறுத்தம் காணுகிறது 
இளைப்பாற!
என் முகம் தேடி நீ வாட  
நெருங்கி வருகிறேன்
கவனமென உன் கை தொடுகிறேன்..! 

பேசிட வார்த்தைகள் அற்று 
ஊமையாகி போன நாம்!
நான்கு கண்களும்  நகராமல் 
உயிர் விட போகும் 
மொத்த காதலின் 
மிச்சத்தை பரிமாறும் 
இறுதி மணித்துளிகள் அவை!

அழுகை சோகம் 
ஆற்றாமை இயலாமை 
என கண்கள் பேசிய உணர்வுகள் ஆயிரம்!

வேடிக்கை தானே!
நம் இருவரின் கடைசி சந்திப்பு 
அது என தெரியாத 
அறிவிலிகளாய் நீயும் நானும்!

தூரத்தில் பச்சை வண்ண கொடி 
அசைய கண்டேன்!
நகர கண்டேன் என்னை விட்டு 
தூரத்தில் உன்னை கொண்டு போக போகும் 
ரயிலும்!

பொடி நடையோடு வேகம் 
கூட்டி நானும் மூச்சிரைக்க 
நானும் தொடர்கிறேன்
பாதையோர நடைமேடை
முடியும் வரை!

இன்றைய 
நிகழ்வுகள் நிஜங்கள் 
யாவும் நினைவுகளாகிவிடும்- 
நாளை நீ ஊர் சேர்கையில்!

வரப்போரத்து புல் நானோ 
களை பிடுங்கபடுவேன் 
உன் வாழ்கை வயல்களில்!

இனிக்கும் பசுமை நினைவுகளோடு 
நெஞ்சில் நீடித்து நிழலாடும் 
இக்காதல்காலம்!

இனி எங்கெங்கு எதிர் காணினும் 
அறியா முகமமெனவே 
கண்ணீர் விழுங்கும் 
கண்களோடு கடந்தாக வேண்டும் 
காதல் முகவரிகள் தொலைத்த 
நம் முகம்!

No comments:

Post a Comment