Tuesday 14 February 2017

எவ்விடமும் கானகமே..!


கானகத்தின் வனப்பினிலே
இருளின் கணத்தினிலே..
காட்டொளி கண்டும்
காணாது போனேனே..!

காட்டருவி காணக்கண்டும்
கானல் நீரின்
ஓட்டத்தினில் கண்கொண்டு
பின் சென்று
கவிழ்ந்தேனே...!

அரியாசனம் துறந்தன்று
துணையும் உடன்கொண்டு
தமையனின் துணைகொண்டு
வனம் வசம்
சென்ற ஓர் வனவாசம்
உலகறியும்..!

காதல் அரியாசனம்
இழந்தன்று
பிரிந்த துணையின்
நினைவில் பிணிப்பறவையென
துணை யாரும் அற்று
வனம் சென்ற நிஜம்
என் உலகறியும்..!

இகழ்ச்சிகள் இடையில்
அஃதொன்று
அடைப்பொன்று அடித்தொண்டையில்..!

உமிழ்ந்தெடுத்து விட முடியா
உயிர் நீர் உணர்ந்தே
உரிமைகள் உதறிந்த
பயணம்..!

தொலைத்த சீதையின்
நினைவுகள் தொலைக்க
நின் பயணம்..!

தூரங்களில்
நீள் கயிறென நீளும்
நம் நினைவுகள்..!

சீதை தொலைத்த
இப்பேதை பயணம்..!!
தமையன்கள் கிடைத்தும்
கிடைத்திடா அச்சீதை..!

காதல் அரியாசனம்
இழந்தன்று தொடங்கி...
பன்னிரெண்டு
திங்கள் தனிவாசம்
முடித்து திரும்புகிறேன்..!

பொதுவென இருக்கும்
ஆசைகள் ஏக்கங்கள்
என்னோடும்..!

தொலைத்த
தாய்மடி வாசம்..!
தோழனின் சிநேகம்..!
உறவுகளின் நேசம்..!

சிறு மழை...!
மண் வாசம் உணர்ந்து..
நுகர்ந்திடும் நாசி..!
சுடு தேனீர் வேண்டி...
ருசித்திடும் இதழ்கள்..!

இவ்வாறே
சில நூறு
சின்ன சின்ன ஆசைகள்..!

இத்தனையும் தாண்டி
சற்றும் குறைவின்றி
நம் காதல் நினைவுகள்..!

வாழ்க்கை வழி தவறிய..
உன் வாழ்க்கை வழியில் தவறிய..
எம்பாதங்களுக்கு எவ்விடமும்
ஆக பெரும் கானகமே..!

எங்கெங்கு நான் போயினும்
நீ அற்று போன
எவ்விடமும் கானகமே..!

No comments:

Post a Comment