Thursday 17 March 2016

உயிர்த்திருக்கிறேன் நான்!!!-1


காதல் நினைவுகள்
என் நினைவுகளை விட்டு
நீங்காத நிலையில்
நினைவுப் பயணம் சொ(ல்)கிறேன்
உங்களோடு ..

கானம் பாடும் நினைவுகள் பல..
கல்லறை நினைவுகளாய் சில..
என எனது நினைவுகளை உங்களது
நினைவில் நீங்கா
வண்ணம் கால் தடங்கள் பதிக்கவிறுக்கிறேன்!!

நினைவுகள்  எல்லாம் நிஜங்கள்
தாங்கிய வண்ணம்!!

நினைத்து பார்க்கையில்
கண்ணீர் துளிகள் நீள் கோட்டில்
மேலிருந்து கீழாய் உருண்டோடுகிறது!

கானல் நீரென நானிருக்க
என்னுள்  நீர்த்தடாகம் அமைத்தாய்.
காகித பூவாய் நானிருக்க
என்னுள் தேன் சுரந்தாய்.
கரும்பாறையன நானிருக்க
உன் விழியால் உரு மாற்றினாய்!!

என் கண்கள் கூட சிரிக்க பழகிவிட்டது
உன் உருவம் காணும் வேளைகளில்!


முதல் கோணல் முற்றிலும் கோணல்
இது பழமொழி..
அம்மொழியை சீராக்கி புதுமொழி  வகுத்திட
ஓர் முடிவும் கொண்டு!!

முதல் காதல் தோல்வியின்
துயர் போக்கி
துளிர் விட்டு
மீள எத்தனித்த ஒரு தருணம்..

அறிமுகமற்ற ஒரு உறவென-நீயும்
நட்பு கரம் நீட்டினாய்

என் வாழ்க்கை நேச வட்டத்தின்
அங்கமென நீயும் ஆனாய்

நள்ளிரவில் காரிருளில் மீளும் வழி
தேடி நான் அலைய
உன் நட்பிலி வெளிச்சத்தில்
நல் உலகம்  காட்டினாய்
என் வாழ்வில் மீண்டும் இசை  மீட்டினாய்!!


உன் மன ஆசை கூட்டினாய்
தயக்கம்  கொண்டு தவிர்த்தே வந்தேன்
நட்போடு மட்டுமே...

எறும்பு ஊர ஊர கல் கூட தேயுமாமே!
மங்கை கூற்றுக்கு மனம் தேயாதோ..

அலைகற்றையின் சேவையில்
அன்போடு வளர்ந்தது நட்போடு
என் காதலும்...

விழிகள் பார்த்து மொழிகள் பேசி
மீண்டும் பருகினேன் காதல் தேனை!!!

பருகிய நேரமோ குறுகிய காலம்
காலம் நம்மை பிரிக்க
ஏறுகிறாய் நீயும்  மன மேடை..

தினமும் உனது கைகுட்டையில்
பயணப்படுகிறது
நாலாய் மடித்து வைக்கப்பட்ட என் இதயம்!

அன்பே! உனது விழிகளில் தான்
எனது  விடியல்களை காண்கிறேன்..
உன்னை காணாத நாட்களெல்லாம்
விடியாத இரவுகளின் கலையாத கனவுகளில்
நீ மட்டும் தானடி!!

நித்தமும் பரிசுத்தமாய்
தூய மனதோடு தான் வருகிறேன்!
கோவிலுக்கு சுத்தமாய் செல்வது தானே மரபு!
ஆம்! எனது காதல் தெய்வத்தை
அல்லவா  காண வருகிறேன் !

எதிர்வரும் எந்தஒரு பெண்ணிடத்திலும்
உன் சாயல் நான் தேட
பொருக்கி என எண்ணி
கோவத்தோடு கடந்து செல்கிறார்கள்!

ஆம்!உண்மையில் இத்தனை பெண்களில்
உனை மட்டும்
பொறுக்கி எடுத்த
காதல் பொருக்கி  தானே நானும்!!

பிரிவதாய் நீ உறுதி செய்து விட்டு
கடைசியாய் என் வீடு வந்து செல்கிறாய்.
ஓர் கரிநாளில்...

அறுத்து எறியப்பட்ட நம் கனவுகள்
இறுக்கி அணைத்த நம் நினைவுகள்
என் அறையின் மூலையில்
அலங்காரமின்றி அலங்கோலமாய்..

தயவு செய்து உன் கண்களுக்கும் கொஞ்சம்
நடிக்க கற்று கொடுத்துவிடு
உன் இதழ்கள் போல்  அல்லாமல்
காதல் சொல்லி விட்டு செல்கிறது!

என் உயிர்கூட்டை உருக்கி எடுத்து
உள்ளடக்கி போகிறாய்
உன்  விழியோரம்
வழிந்த  நீரோடு!

தாய் தன் ஒரே குழந்தையை
நேசிப்பது போல் எனது
காதலான உன்னை மட்டுமே
நேசிக்கிறேன்
சுவாசமன சுவாசிக்கிறேன்..

உன் திருமண நாள் அன்று
உரக்க அடிக்க போகும் மேளச்சத்தத்தில்
என் அழுகுரல்
யார் செவிக்கும் சேராமல்
யார் மதிக்கும் எட்டாமல்
யார் விழிக்கும் தெரியாமல்
அடங்கிப்போக போகின்றது என்னோடு மட்டுமே!!


என் இதய வீணையின் நரம்புகளை மீட்டி
ஆனந்த இராகங்கள்
சோக கீதங்கள்
இரண்டும் நீயே இசைக்கிறாய் இன்றும்..

நட்சத்திரமென மின்னும்
அளவான அழகான உன்
புன்ச்சிரிப்பை நினைவில் தாங்கியவாறு..

உன் காதலோடும்
உன்னால் உருவாகிய கவிதையோடும்
உயிர்த்திருக்கிறேன் நான்!!!

No comments:

Post a Comment